மனித வனவிலங்கு மோதல் மேலாண்மை: கூடலூரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-20 18:47 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மனித வனவிலங்கு மோதல் மேலாண்மைக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கூடலூர் வனக்கோட்டத்தில் மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மனித விலங்கின மோதல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வனத்துறை முன்கள பணியாளர்களுடன் யானை விரட்டும் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு குழு காவலர்கள் என மொத்தம் 120 எண்ணிக்கையிலான தற்காலிக காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுடன் காட்டுயானைகள் அதிகமாக இடம்பெயரும் பருவகாலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் 40 எண்ணிக்கையிலான தற்காலிக காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வன உயிரினங்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, மனித காயம் மற்றும் கால்நடை சேதங்களுக்கான நிவாரண தொகை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இழப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வனத்துறை உரிய நேரத்தில் உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.

மனித வனவிலங்கு மோதல்களை விரைவில் கண்காணித்து கையாள்வதற்காக சமீபத்தில் கூடுதலாக மூன்று ரோந்து வாகனங்கள் கூடலூர் வனக்கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை சூழலை மேம்படுத்தவும், வன உயிரினங்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கிலும், விரிவான அளவில் வன உயிரின வாழ்விட மறுசீரமைப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வனப்படை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில், நாடுகாணி வனச்சரகத்திற்குட்பட்ட ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command-and-Control Centre) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித வனவிலங்கு மோதல்களால் அதிகமாக பாதிக்கப்படும் 46 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 34 பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடனும், 12 இடங்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடனும் கூடிய 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்போது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ளன.

இந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வன விலங்கு நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதால், வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் மனித வனவிலங்கு மோதல்களுக்கான சூழ்நிலைகள் குறித்து உடனடி எச்சரிக்கைகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. இத்தகைய எச்சரிக்கைகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வனப்பணியாளர்களுக்கும், வனப்பகுதியினை ஒட்டியுள்ள மக்கள் வசிப்பிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்கும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுவதன் மூலம் பொது மக்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மனித வனவிலங்கு மோதல்கள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் எளிய முறையில் உதவி பெற மற்றும் தகவல் அளிக்க ஏதுவாக இத்திட்டத்தின் கீழ் இன்று கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் (1800–425–4353) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக, தொலைதூர பகுதிகளிலும் தடையில்லா தொடர்பிற்காக கூடலூர் வனக்கோட்டத்தில் கம்பியில்லா தொலை தொடர்பு வலையமைப்பும் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப முயற்சியின் ஒரு பகுதியாக காட்டுயானைகளின் நடமாட்டத்தினை கண்காணிக்கவும், மக்கள் வசிப்பிடங்களில் நுழையும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் Thermal Imaging திறன் கொண்ட இரண்டு அதிநவீன ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. காட்டுயானைகளை அறிவியல் ரீதியாக பின்தொடர்ந்து, அதன் நடமாட்டம் கண்காணிப்பதற்காக மூன்று ரேடியோ காலர்கள் வாங்கப்பெற்றுள்ளன. இத்தகைய அதி நவீன தொழில் நுட்பத்தினை செயல்படுத்தி, நீண்டகால மனித வனவிலங்கு மோதல்களைத் தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனித வனவிலங்கு மோதல் மேலாண்மையின் ஒரு முக்கிய மைல்கல்லாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு நலனை உறுதி செய்யவும், மாநிலத்தின் இயற்கை சூழலின் முக்கிய பங்காற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பினை நிலைநாட்டவும், இவ்வாறான பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதனை மேம்படுத்தும் முயற்சிகளில் உறுதியாக செயல்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்