கைலாசநாதர் மற்றும் படவேட்டம்மன் கோயில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.;

Update:2025-12-28 15:42 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (28.12.2025) சென்னை, பாடி, கைலாசநாதர் திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ள படவட்டம்மன் திருக்கோயிலை உயர்த்திடும் (Lifting) வகையில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்தி வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வழங்கி வருகின்றது. கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை மண்டலங்களில் ரூ. 86.68 கோடி மதிப்பீட்டில் 323 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 207 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. அதேபோல் சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ள திருக்கோயில்களை நவீன தொழில்நுட்ப வசதியுடன் உயர்த்தி (Lifting) அமைக்கும் பணிகள் 25 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 14 திருக்கோயில்களின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

சென்னை, பாடியில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலை சாலை மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயர்த்தி கருங்கல் திருக்கோயிலாக அமைத்தல், சாலக் கோபுரம் அமைத்தல், உப சன்னதிகள், மடப்பள்ளி மற்றும் அலுவலகம் கட்டுதல், புதிய கொடிமரம் நிறுவுதல், வெளிப்பிரகாரம் முழுவதும் கருங்கல் தரைத்தளம் அமைத்தல் போன்ற திருப்பணிகள் ரூ. 3.49 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதேபோல், 70 ஆண்டுகள் பழமையான பாடி, எம்.டி.எச். சாலையில் அமைந்துள்ள அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோயிலானது சாலை மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ளனது. இத்திருக்கோயிலை 5 அடி உயர்த்தும் பணிகள் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதோடு, ரூ. 47.75 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு நிலை விமானத்துடன் கருங்கல் கருவறை அமைக்கும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்