‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிய வாழ்நாள் சாதனையாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவராகக் கருதப்படுவார்கள்.;

Update:2025-11-17 14:30 IST

சென்னை,

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருது 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:

Advertising
Advertising

நடிகர், நடிகையர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடகி, ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், ஒலிப்பதிவாளர், சண்டைப்பயிற்சியாளர், நடன ஆசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் தையற் கலைஞர் என தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிய வாழ்நாள் சாதனையாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவராகக் கருதப்படுவர்.

இவ்விருதிற்குரிய விண்ணப்பப் படிவத்தினை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வலைதளத்தில் (www.dipr.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரிவான விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை/ உறுப்பினர்-செயலாளர், திரைப்படத் துறையினர் நலவாரியம் முதல் தளம், மாநில செய்தி நிலையம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 28.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பிட வேண்டுகிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்