பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Update:2025-12-01 15:09 IST

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இயற்கைப் பேரழிவுகள், பயிர் நோய்கள், பருவமழை போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசால் வழங்கப்பட்ட விவசாய அடையாள எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப தேசிய பயிர் காப்பீட்டு இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும், இதன் காரணமாக அறுபது விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும், அண்மையில் விவசாய அடையாள எண்ணை அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், இன்று ஒரு நாளைக்குள் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டினை மேற்கொள்ள இயலாது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதோடு, பல இடங்களில் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. பயிர் சாகுபடி சான்றிதழ் அளிக்க வேண்டிய வருவாய்த் துறையினர் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வருவதால் சான்றிதழ்களை பெறுவதில் சிரமம் இருப்பதாகவும், மழை காரணமாக மின்னணு சேவை மையங்கள் மூடி உள்ளதாகவும், இணைய தளங்கள் முடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது தீவிரமாக இருந்து வருகின்ற நிலையில், பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையில் நூறு விழுக்காடு நியாயம் இருக்கிறது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 15-ஆம் தேதி வரையில் நீட்டிக்க விரைந்து ஆவன செய்யுமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்