மொழி திணிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழு துணை போகக்கூடாது; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
பாஜக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்தி திணிப்பு பல வழிகளில் நடைபெறுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது;
மொழி திணிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழு துணை போகக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பல்கலைக்கழக மானியக்குழு மொழி திணிப்புக்கு துணை போகக்கூடாது. தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிப்பதில் பாஜக ஒன்றிய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 பள்ளிக் கூடங்கள் தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை மூன்று மொழிகள் கற்பிப்பதை வலியுறுத்துகிறது.
இதனை ஆரம்ப நிலையில் இருந்தே தமிழ்நாடு அரசும், மக்களும் எதிர்த்து வருகின்றனர். கடந்த காலங்களில் இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த பேரெழுச்சிகள் காரணமாக நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு “மக்கள் விரும்பி ஏற்கும் வரை, மொழி திணிப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபடாது” என நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
அதனை மத்திய அரசும் கொள்கை நிலையாக ஏற்று, செயல்பட்டு வந்தது. பாஜக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்தித் திணிப்பு பல வழிகளில் நடைபெறுகிறது. பிரதம அமைச்சரின் ஸ்ரீ கல்வித் திட்டத்தை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய “அனைவருக்கும் கல்வி” திட்ட நிதி ரூ.2500 கோடியை தர மறுத்து, பள்ளிக் கல்வித்துறையை வஞ்சித்து வந்தது. இதன் காரணமாக கூடுதல் நிதிச் சுமையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர் மணிஷ் ஆர் ஜோஷி கடந்த 2ம் தேதி மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மாணவர்களும், ஆசிரியர்களும் மூன்றாவதாக ஒரு மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என வழிகாட்டல் உத்தரவு வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் இரு மொழிக் கொள்கை சொந்தக் காலில் நின்று, சுயமாக சிந்தித்து முடிவெடுத்து, முன்னேறும் சாதனையாளர்கள் பலரை உருவாக்கியுள்ளது. பன்னாட்டு குழு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளாக பலர் பணிபுரிந்து வருகின்றனர் என்பதை கருத்தில் கொள்ளாமல், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிக்கும் முயற்சி, கல்வித்துறையில் மட்டுமல்ல, சமூக நிலையிலும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாகும். இதனை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை கருத்தில் கொண்டு, பல்கலைக் கழக மானியக் குழு, தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மானியக்குழு செயலாளரையும், மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.