12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் தற்போது வெப்பச்சலனம், வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, ஒசூரில் 12 செ.மீ., திண்டுக்கலில் 11 செ.மீ., அவலூர்ப்பேட்டை, செம்மேடு, கீழ்பென்னாத்தூர் தலா 10 செ.மீ., முண்டியம்பாக்கம், தர்மபுரி தலா 9 செ.மீ., மூங்கில்துறைப்பட்டு, செங்கம், ஆரணி, புலிப்பட்டி தலா 8 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தென் இந்தியா மற்றும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதன்படி, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
அதனைத்தொடர்ந்து இன்னும் 10 நாட்களுக்கு வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மாலை, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.