தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-08-23 05:53 IST

சென்னை,

ராமநாதபுரம் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல சுழற்சி

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28-ந் தேதி வரை...

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் 26-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 26-ந் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வடகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்