வடகிழக்கு பருவமழை தொடக்கம்... எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.;
சென்னை,
வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விலகுகிறது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு
அதிலும் குறிப்பாக இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்யக் கூடும்.
நாளை (வெள்ளிக்கிழமை) சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள-கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல்மழை தூரியது.