‘எச்1-பி’ விசா கட்டணம் உயர்வு எதிரொலி: துபாய் வழியாக இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து

துபாய் வழியாக இந்தியா வரும் விமான பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விகிதம் கடும் சரிவை சந்தித்து உள்ளது.;

Update:2025-09-23 10:46 IST

துபாய்,

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசா கட்டணம் சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலராக ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தியதன் எதிரொலியாக துபாய் வழியே இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் முன்பதிவு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.

அமெரிக்காவின் எச்1-பி என்பது ஒரு தற்காலிக வேலைக்கான விசாவாகும். குறிப்பாக தகவல்தொடர்பு, பொறியியல், மருத்துவம், நிதி போன்ற துறைகளில் வெளிநாடுகளை சேர்ந்த நிபுணர்களை பணியமர்த்துவதற்காக அமெரிக்க நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த விசாவில் உயர் சம்பளம் மற்றும் தொழில்நுட்ப அனுபவம் கிடைக்கிறது. அமெரிக்காவில் வாழும் வாய்ப்பும் அங்கு குடிமக்களாக தொடர கிரீன் கார்டு பெறவும் இந்த விசா உதவியாக இருக்கும். இந்த விசாவை பெற்றவர்கள் எச்4 விசா மூலம் தங்கள் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல முடியும்.

அமீரகம், இந்தியா போன்ற நாடுகளுக்கு திரும்பும்போது இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கிறது. எச்1-பி விசா பெரிய தொழில் வேலை வாய்ப்புகளை தருகிறது என்றாலும் பயணத்தடைகள், எதிர்கால நிச்சயமின்மை, குடும்பத்தினரை வைத்திருப்பதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

இதில் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்1-பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். எனவே ஏற்கனவே இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? என்பது குறித்து தெளிவு இல்லை. குறிப்பாக சொந்த நாட்டுக்கு சென்று திரும்பும்போது மீண்டும் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகமும் உள்ளது.

இதன் காரணமாக ஒருவித பரபரப்பும், பயமும் அவர்களிடையே தொற்றி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி இந்தியர்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். டிரம்பின் உத்தரவை அடுத்து பலரும் தங்கள் விடுமுறைகளை ரத்து செய்துள்ளனர்.

அமெரிக்கா- இந்தியா இடையே பயணமானது துபாய் வழியே செல்வதாகும். இதில் துபாய் வரையுள்ள பெரும்பாலான பயணங்களை இந்தியர்கள் ரத்து செய்துள்ளனர். இதன் காரணமாக இந்த வழியில் இயங்கும் விமான சேவைகளில் டிக்கெட் முன்பதிவு விகிதம் கடும் சரிவை கண்டுள்ளதாக டிராவல் ஏஜென்சிகள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளன.

இது ஒரு முறை செலுத்தும் கட்டணத்திற்கு மட்டுமே. ஏற்கனவே வைத்திருப்பவர்கள் வழக்கம்போல நாட்டில் இருந்து சென்று திரும்பி வரலாம் என அமெரிக்க ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறியிருந்தாலும் குழப்பம் நீடிப்பதால் பலரும் அமெரிக்காவை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்