அமெரிக்க பணய கைதியை இன்று விடுதலை செய்யும் ஹமாஸ்

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்;

Update:2025-05-12 14:33 IST

காசா சிட்டி,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள அமெரிக்க பணய கைதியை இன்று விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் வாழ் அமெரிக்கரான இடன் அலெக்சாண்டர் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். 2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அலெக்சாண்டரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனைக்கு பணய கைதியாக கடத்தி சென்றனர்.

அவரை மீட்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது அமெரிக்கா, ஹமாஸ் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையில் அலெக்சாண்டரை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்