இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது;

Update:2025-06-25 14:25 IST

தெஹ்ரான்,

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்கா 21ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த 11 நாட்கள் நடந்த மோதல் நேற்று முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்தத்திற்கு ஈரானும், இஸ்ரேலும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக பல நபர்களை கைது செய்து எந்தவித விசாரணையும் இன்றி ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் 3 பேருக்கு ஈரான் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த 10 நாட்களில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் மொத்தம் 6 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்