போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும்: டிரம்ப் பதிவு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் இன்று காலை உரையாற்ற உள்ளார்.;

Update:2025-06-22 07:03 IST

நியூயார்க்,

காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது.

இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.

உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ட்ரூத் சோசியலில் அவர் வெளியிட்டு உள்ள மற்றொரு செய்தியில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு இன்றிரவு 10 மணியளவில் (இந்திய நேரம் காலை 7.30 மணி) நான் உரையாற்ற உள்ளேன். ஈரானில் நாம் வெற்றியுடன் நடத்தி முடித்த ராணுவ தாக்குதலை பற்றி பேச இருக்கிறேன்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளுக்கு இது ஒரு வரலாற்று தருணம். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் தற்போது சம்மதிக்க வேண்டும். நன்றி என அவர் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்