மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலி: நைஜீரியாவில் அவசர நிலை அறிவிப்பு
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலியாக நைஜீரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.;
அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுத கும்பல்கள் செயல்படுகின்றன. அவர்கள் மாணவர்கள், அப்பாவி மக்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர். அதன்படி கடந்த வாரம் தனித்தனி சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் கெபி மாகாணத்தில் கடத்தி செல்லப்பட்ட 24 மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் நைஜர் மாகாண கடத்தல் சம்பவத்தில் இதுவரை 50 பேர் மட்டுமே போலீசில் தஞ்சம் அடைந்துள்ளனர். மற்ற மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நைஜீரியாவில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் உள்ள 1 லட்சம் பேரை பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த இடங்களில் நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மேலும் 50 ஆயிரம் போலீசாரை புதிதாக நியமிக்கவும் காவல்துறைக்கு அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.