ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.;
ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த 10ம் தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. மேலும், கொல்லப்பட்ட 28 பணய கைதிகளில் சிலரின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.
அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தப்படி கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்கள் அனைத்தையும் கடந்த 13ம் தேதி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் 16 பணய கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படவில்லை.
அதேபோல், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் பகுதியாக ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். ஆனால், ஆயுதங்களை கைவிட ஹமாஸ் மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளை, ஒப்பந்தப்படி காசாவுக்கு அதிக அளவிலான நிவாரண பொருட்களை அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். ஆனால், நிவாரண பொருட்கள் அனுப்புவதை இஸ்ரேல் தடுப்பதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இதனிடையே, நேற்று இஸ்ரேல் , ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனையில் ரபா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளின் சடலங்களை ஒப்படைக்க ஒப்பந்தப்படி எகிப்தில் இருந்து நிவாரண பொருட்கள் காசாவுக்குள் நுழையும் வகையில் ரபா எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், காசாவில் போர் முடிவுக்கு வர ஒப்பந்தத்தின் 2ம் பகுதி மிகவும் முக்கியம். ஒப்பந்தப்படி ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும். காசா முனை ஆயுதமற்ற பகுதியாக மாற்றப்படவேண்டும். இவை இரண்டும் வெற்றிகரமாக நடந்தால் போர் முடிவுக்கு வரும். ஹமாஸ் ஆயுதங்களை கைவிடாமல், காசா முனையில் ஆயுதங்கள் இருக்கும்வரை போர் முடிவுக்கு வராது... போர் தொடரும்’ என்றார்.