சண்டே ஸ்பெஷல்: விதவிதமான சுவைகளில் சட்னி செய்வது எப்படி..?
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள விதவிதமான சுவைகளில் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.;
பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் விதவிதமான சுவைகளில் சட்னி செய்வது எப்படி? என்பதை பார்க்கப்போகிறோம். கடையில் விற்கும் மாவு பாக்கெட்டை வாங்கினால், நம்மால் இட்லி, தோசை ரெடி பண்ண முடியும். ஆனால், அதற்கு தொட்டுக்கொள்ள சட்னிக்கு என்ன செய்வது?. அதனால்தான் இந்த வாரம் சட்னி வகைகளை கையில் எடுத்திருக்கிறோம். செய்து பார்த்து உங்களுடைய மேலான கருத்துகளை பதிவிடுங்கள்.
தேங்காய் சட்னி (4 பேர் சாப்பிடக்கூடியது)
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 2 பெரிய துண்டு
பொரி (உடைத்த) கடலை - ஒரு கை அளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை:
2 பெரிய தேங்காய் துண்டுகளை பல் பல்லாக வெட்டிக்கொள்ளவும். அதை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் உடைத்த கடலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் (கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று) சிறிது ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சட்னியுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து கலக்கவும். சுவையான தேங்காய் சட்னி ரெடி.
தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
தக்காளி - வெங்காயம் ஆகியவற்றை சிறியதாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பூண்டை தோல் நீக்கவும். மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இடையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். லேசான சூட்டில் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
மற்றொரு சிறிய கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்க்கவும். மணமணக்கும் தக்காளி சட்னி ரெடி.
பூண்டு சட்னி
தேவையான பொருட்கள்
முழுப் பூண்டு - 2
சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
காய்ந்த மிளகாய் - 2
புளி - கோலிக்குண்டு அளவு
செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உறித்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். சூடு குறைந்ததும் மிக்சி ஜாரில் இவைகளை போட்டு, உடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். சிறிய கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை சட்னியுடன் சேர்க்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி.
வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் - 2 சில் அளவு
புளி - கோலிக்குண்டு அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை உறித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். சற்று ஆறியதும் அதை மிக்சி ஜாரில் மாற்றிக்கொள்ளவும். மேலும், தேங்காய், புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். சிறிய கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை சட்னியுடன் சேர்க்கவும். சுவையான வெங்காய சட்னி ரெடி.
புதினா சட்னி
தேவையான பொருட்கள்:
புதினா - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் - 2 துண்டு
செய்முறை:
தேங்காய் துண்டுகளை பல் பல்லாக வெட்டிக்கொள்ளவும். தேங்காய், புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
சிறிய கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து மிக்சியில் அரைத்து வைத்த சட்னியில் போட்டு கிளறவும். சுவையான புதினா சட்னி ரெடி.