நெருங்கும் மழை காலம்... வாட்டர் ஹீட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன...?
வாட்டர் ஹீட்டரின் டேங்க் எந்தப் பொருளால் ஆனது என்பதையும் கவனிக்க வேண்டும்.;
சமீப நாட்களாக, அவ்வப்போது மழைப் பொழிவு நிகழ்கிறது. இந்த சூழலில்தான், நாம் வெந்நீரில் குளிக்க விரும்புவோம். மழைக்காலத்திற்கு முன்பாக, வீட்டில் வாட்டர் ஹீட்டர் வாங்கி பொருத்த ஆசைப்படுபவர்களும் இருப்பார்கள். அப்படி புதிதாக வாட்டர் ஹீட்டர் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் இதோ...
கொள்ளளவு
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியான கொள்ளளவு கொண்ட வாட்டர் ஹீட்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, 2-4 பேர் இருந்தால் 20 லிட்டர், 4-8 பேர் இருந்தால் 40 லிட்டர் என தேவைப்படும்.
வகையும், சேமிப்பும்..
இன்ஸ்டன்ட் (instant) வாட்டர் ஹீட்டர்கள் உடனடி சூடான நீரை வழங்கும், ஸ்டோரேஜ் (storage) வாட்டர் ஹீட்டர்கள் தண்ணீரைச் சேமித்து வைத்து வெப்பப்படுத்தும். உங்கள் தேவைக்கு ஏற்ப இதைத் தேர்வு செய்யவும். மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தும் ஆற்றல் திறன் கொண்ட வாட்டர் ஹீட்டர்களை தேர்ந்தெடுப்பது மின் கட்டணத்தைக் குறைக்க உதவும்.
டேங்க்
வாட்டர் ஹீட்டரின் டேங்க் எந்தப் பொருளால் ஆனது என்பதையும் கவனிக்க வேண்டும். துருப்பிடிக்காத பொருட்களால் செய்யப்பட்ட டேங்க்குகள் நீடித்து உழைக்கும். ஒருசில பகுதிகளில் தண்ணீரில் உப்பு தன்மை அதிகமாக இருக்கும். அதை சமாளிக்கும் வகையிலான டேங்குகளும் இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன.
மேலும் வாட்டர் ஹீட்டர் வாங்கும்போது, அதற்கான பராமரிப்பு மற்றும் சேவை பற்றி அறிந்து கொள்வதும் அவசியம். மேலும் கடினமான நீர் பயன்படுத்தும்போது தண்ணீரை சூடாக்கும் கம்பி செயலிழந்து, தண்ணீர் நிறம் மாறலாம். இதைத் தவிர்க்க, சிறப்பு வாட்டர் பில்டர்களும் சந்தையில் இருக்கின்றன. அதனால் கவனமாக தேர்வு செய்யுங்கள். கவனமாக பராமரியுங்கள்.
பாதுகாப்பு அம்சங்கள்
அதிக வெப்பம் மற்றும் மின் கசிவைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா..?, உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
பராமரிப்பு முறைகள்:-
1. உப்பு நீர் பகுதிகளில் ஹீட்டரை பயன்படுத்தினால், அதை அடிக்கடி பராமரிக்க வேண்டும். ஏனெனில் தாது உப்புகள் ஹீட்டரின் உள் பகுதியில் ஒட்டிக் கொள்ளும். பின்னர் ஹீட்டரின் செயல் திறன் குறைந்து விடும்.
2. தண்ணீல் இல்லாமல் வெறும் ஹீட்டரை சூடாக்காதீர்கள்.
3. ஹீட்டர்கள் ஆட்டோமேட்டிக்காக தற்காலங்களில் ஆப் ஆகிவிடும். இந்த வசதி இல்லாத ஹீட்டர்களை பயன்படுத்தும்போது குறித்த நேரத்தில் ஆப் செய்து விடுங்கள். இதை செய்ய தவறினால் மின்சார கட்டணம் உயர்வதுடன், ஹீட்டருக்கும் பாதிப்பு ஏற்படும்.
4. ஹீட்டருக்கான பவர் சாக்கெட்டிற்குள் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தவறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனை கவனிக்கத் தவறினால் பேராபத்து ஏற்படலாம்.
5. ஹீட்டரில் தண்ணீரின் சரியான வெப்பநிலை அளவு 40 முதல் 45 டிகிரி செல்சியஸ். இதற்கு அதிகமாக ஹீட்டரை சூடேற்றும்போது பின்னர் அதை சமன்படுத்த தண்ணீரை சேர்க்க நேரிடும். மின்சாரமும், ஹீட்டரின் வேலையும் வீணாக்கப்பட்டு விடும்.