பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் கம்பீர் ?

0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.;

Update:2025-11-27 06:51 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.

கவுகாத்தி டெஸ்ட் தோல்விக்கு பிறகு கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், டெஸ்ட் பணிக்கு இன்னும் நீங்கள் பொருத்தமானவர் என நம்புகிறீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கம்பீர் கூறியதாவது,

எனது எதிர்காலத்தை (பயிற்சியாளர் பணி) முடிவு செய்ய வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியம் தான். நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற போது, இந்திய கிரிக்கெட் தான் முக்கியம். நான் முக்கியமல்ல என்று சொன்னேன். இப்போது இங்கும் அதையேத் தான் சொல்கிறேன்.

ஆனால் இதே நபர் தான் இளம் வீரர்களுடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (2-2 என சமன்) சாதித்தார். அதை நீங்கள் விரைவில் மறந்து விடுவீர்கள். நிறைய பேர் நியூசிலாந்து தொடரில் அடைந்த தோல்வி குறித்தே தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால் இதே பயிற்சியாளரின் கீழ் தான் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. இது அனுபவம் குறைந்த அணி. அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

தோல்விக்கு ஒரு நபர் மட்டும் பொறுப்பு அல்ல. எல்லோரும் பொறுப்பு. குற்றச்சாட்டு என்னிடம் இருந்து தொடங்கட்டும். இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 95 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்த நாங்கள் 122 ரன்னுக்கு 7 விக்கெட் என சரிவுக்குள்ளானதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் இன்னும் கவனமாக விளையாடி இருக்க வேண்டும். இதற்காக ஒரு வீரரையோ அல்லது ஒரு ஷாட்டையே குறை கூற முடியாது. அனைவரிடமும் தவறு இருக்கிறது. அதனால் குறிப்பிட்ட நபர் மீது பழிபோடமாட்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதீத திறமைசாலிகளோ அல்லது தடாலடியாக மட்டையை சுழட்டக்கூடியவர்களோ தேவையில்லை. ஓரளவு திறமையுடன் வலுவான மனநிலையை கொண்டவர்களே அவசியம். அப்படிப்பட்ட வீரர்கள் தான் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக உருவெடுப்பார்கள்.

இவ்வாறு கம்பீர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்