நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.;

Update:2025-12-03 11:38 IST

கிறைஸ்ட்சர்ச்,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், டாம் லாதம் 24 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன், பிரேஸ்வெல் மட்டும் நிலைத்து ஆடினர். பொறுப்புடன் ஆடிய வில்லியம்சன் அரைசதமடித்தார். அவர் 52 ரன்களில் வெளியேறினார். பிரேஸ்வெல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231ரன்கள் எடுத்தது.

இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய உடனே நியூசிலாந்து அணி கடைசி விக்கெட்டை இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேகனரின் சந்தர்பால், ஷாய் ஹோப் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்து ஆட்டமிழநதனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேக்கப் டபி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 67 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்