காலையில் தவிர்க்க வேண்டியவை

காலை வேளையில் உடலும், மனதும் புத்துணர்ச்சியுடன் இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமான மன நிலையில் செயல்பட முடியும். படுக்கையை விட்டு எழும்போது சில விஷயங்களை தவிர்ப்பது காலைப்பொழுதை இனிமையானதாக மாற்றும். அவை....

Update: 2023-10-13 16:30 GMT

தூக்க சுழற்சி:

அலாரம் அடிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண் விழிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு இரவில் தூங்க செல்லும் நேரம் முக்கியமானது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்க சென்று மறுநாள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கும் வழக்கத்தை ஒரு வாரம் வரை தொடர்ந்து பின்பற்றி வந்தால் இயல்பாகவே உடல் அத்தகைய தூக்க சுழற்சிக்கு பழக்கப்பட்டுவிடும். அலாரம் அடிப்பதற்கு முன்பு எழுவதற்கு பழகிவிடுவீர்கள். ஆரம்பத்தில் சிலர் அலாரம் அடித்ததும்தான் எழுவதற்கு முயற்சிப்பார்கள். அப்போது மறு அலாரம் அடிக்கும் வரை காலம் தாழ்த்தாமல் உடனே படுக்கையைவிட்டு எழுந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உடலில் சோர்வு குடிகொண்டு விடும். அன்றைய நாளை கடினமாக உணர வைக்கும்.

செல்போன் பார்ப்பது:

காலையில் கண் விழித்ததும் செல்போன் பார்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உறக்க நிலையில் இருந்து விழிக்கும் கண்கள் மீது செல்போன் வெளிச்சம் படுவது கண் சோர்வுக்கு வித்திடும். சிலர் படுக்கையில் செல்போனை பார்க்கத் தொடங்கினால் எழுந்திருக்க மனமில்லாமல் அதிலேயே மூழ்கிப்போய்விடுவார்கள். அது அன்றைய நாளினை உற்சாகமாக தொடங்கும் மனநிலையை சிதைத்துவிடும். ஒருவித மன அழுத்தம் ஆட்கொள்ள தொடங்கிவிடும். கவனச் சிதறலுக்கு வழிவகுத்து அன்றைய நாளின் திட்டமிடுதலுக்கு இடையூறாக அமைந்துவிடும்.

காலை உணவை தவிர்ப்பது:

காலை உணவுதான் அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் வெறுமையுடன் இருக்கும் உடலுக்கு ஆற்றலை கொடுக்கும் சக்தி காலை உணவில் இருக்கிறது. அதைத் தவிர்ப்பது உடலை பலவீனப்படுத்திவிடும். கவனக் குறைபாட்டுக்கு வழிவகுக்கும். மதிய உணவுக்கு முன்பு நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிட வைத்துவிடும். மதிய உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

அவசரமாக புறப்படுவது:

காலையில் தாமதமாக கண் விழிப்பவர்கள் அவசர அவசரமாக புறப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். நிதானமின்றி அவசர கதியில் செயல்படுவார்கள். அப்படி அவசரமாக அன்றைய நாளை தொடங்குவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். மனச்சோர்வுக்கும் வித்திடும். காலை வேளையில் மனம் அமைதியான சூழலை உணர வேண்டும். காலை நேர பழக்க வழக்கங்களை நிதானமுடன் செய்ய வேண்டும். முன்கூட்டியே எழுந்திருக்க பழகிவிட்டால் கடைசி நேர அவசரத்தை தவிர்க்கலாம்.

காபி பருகுவது:

காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது இதயத்துடிப்பு அதிகரிக்க வழிவகுக்கும். உடல் நடுக்கத்திற்கும் வித்திடும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் பருகுவதுதான் நல்லது. அதன் பிறகு காபி குறைவாக பருகலாம்.

Tags:    

மேலும் செய்திகள்