வார ராசிபலன் 26.05.2024 முதல் 01.06.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

Update: 2024-05-26 01:05 GMT

இந்த வாரராசிபலன்:

மேஷம்

முயற்சிகளில் வெற்றி அளிக்கும் வாரம். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக பேசி, மகிழ்வீர்கள். மன நிலையை பொறுத்தவரை பல்வேறு சிந்தனைகள் வந்து போகும். வாழ்க்கைத் துணை, குழந்தைகள், சொந்தபந்தம் ஆகிய உறவுகளின் போக்கு மன உளைச்சலை உருவாக்கும். உற்சாகமாக இருப்பதாக வெளியில் காட்டிக்கொண்டாலும் மனதில் ஒருவித குழப்பம் இருந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அல்லது பெற்றோர்களின் ஆலோசனைகளைப் பெற்று பல சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு அகலும். தொழில் துறையினருக்கு லாபகரமான வாரம். மேஷ ராசியில் பிறந்த சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

ரிஷபம்

வாரத் தொடக்கத்தில் இருந்த மன அழுத்தம் அகன்று மனதில் புது தெம்பு ஏற்படும். மனைவி வகை உறவில் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். தாமதமாகும் திருமணங்கள் நடப்பதற்கான சூழல் ஏற்படும். உறவினர்களும், உடன் பிறந்தோரும் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் கல்விக்கட்டண செலவுகளை கடன் வாங்கி சமாளிப்பீர்கள். தொழில், பணியிடங்களில் அமைதியாக இருந்து காரிய வெற்றி பெற வேண்டும். சொந்த தொழில் செய்வர்களுக்கு புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். பலர் கூட்டுத்தொழில் தொடங்கும் முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவார்கள். பெண் நண்பர்களிடம் பேசும்போது கவனம் தேவை. மனதில் தோன்றும் திடீர் உற்சாகத்தால் தொழில், பணி, நண்பர்கள் ஆகிய விஷயங்களில் உடனடி முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

இந்த வாரம் மனதில் இருந்த கவலைகள் அகன்று தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளை அல்லது இட மாற்றம் ஏற்படும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை உருவாகும். சொந்த தொழில் செய்பவர்கள் கடன் பெற்று தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்வார்கள். தொழில் அல்லது உத்தியோகம் தொடர்பாக வெளி மாநில, வெளி நாட்டு பிரயாணங்கள் ஏற்படும். இருபால் நண்பர்களும் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்படும்.

கடகம்

பழைய சிக்கல்களை தீர்த்து புதிய சிக்கல்களை சந்திக்கும் வாரம் இது. சிக்கல்கள் எதுவானாலும் அதை சந்திக்கும் மன திடமும் இருக்கும். இறை வழிபாடுகளில் மனம் செல்லும். இனம் புரியாத நம்பிக்கை மனதில் தெம்பை அளிக்கும். பல தடைகளை கடந்து செய்தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் புதிய விஷயங்களை செயல்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். அதற்காக பாடுபட்டதால் மனச்சோர்வும், அசதியும் ஏற்படும். அமைதியாக, ஓய்வெடுத்துக்கொண்டு அவற்றை சமாளிக்க வேண்டும். குழந்தைகளின் திறமைகளை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் கருத்துக்கள் அல்லது மனஸ்தாபங்களை மற்றவர்களிடம் தெரிவித்தால் அவை உங்களுக்கு எதிராக மாறும். அதனால் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கை அவசியம்.

சிம்மம்

இந்த வாரமும் மனச் சங்கடங்களும், பொருளாதார சிக்கல்களும் தொடரும். நமக்கு மட்டும் ஏன் இப்படி சிக்கல்கள் ஏற்படுகிறது என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும். வாழ்க்கை துணையிடம் எதை பேசினாலும் வாக்குவாதமாக மாறுவது மன அழுத்தத்தை உருவாக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றில் மாற்றம் செய்யும் சூழல் சிலருக்கு ஏற்படும். கடன் பெற்று வீட்டுமனை, இடம் வாங்கும் வாய்ப்பும் சிலருக்கு உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மன உளைச்சல் ஏற்படும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் பின் வாங்குவதால் தன்னந்தனியாக செயல்பட்டு காரிய வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும்.

கன்னி

செய்யும் உதவிகளால் பல பிரச்சினைகள் நீங்கும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். கணவன்-மனைவியிடையே நீண்ட கால ஆசைகள் நிறைவேறுவதற்கான தொடக்கமாக இந்த வாரம் உள்ளது. எதிர்பாராத நபர்கள் அன்னியோன்னியம் அதிகமாகும். பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்களுக்கு காலம் கனிந்து விட்டது. விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். வார கடைசியில் சின்னச்சின்ன விஷயங்களில் கூட உடனடியாக முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும். உங்கள் எதிராளிகள் தீட்டிய திட்டங்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.

துலாம்

உறவுகள், நட்புகள் பொருளாதார உதவி அளிக்கும் வாரம் இது. மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். அதனால் குடும்பத்தில் சாதாரணமாக தெரிவிக்கும் கருத்தும் வாக்குவாதமாக மாறும். வங்கி கடன், நகை அடமானம் என்று பணத்துக்காக பல இடங்களில் அலையும் சூழல் ஏற்படும். பலமுறை சிந்தித்த பின்னரே பயணங்களை மேற்கொள்ள வேண்டும். யார் மீதும் நம்பிக்கையற்ற மனநிலை உருவாகும். அதை அறிந்து அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்கால நலனுக்கு உதவியாக இருக்கும் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பெண்களின் அடிவயிற்று பகுதியில் சிறிய வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரது ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

விருச்சிகம்

பல்வேறு புதிய நபர்களின் தொடர்பு ஏற்படும் வாரம் இது. உங்கள் திட்டப்படி காரியங்கள் செய்யாமல் மற்றவர்களுக்காக அவற்றை மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும். வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எவ்வளவு குழப்பமான சூழலிலும் தெளிவான எண்ணத்தோடு செயல்படுவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக ஆவார்கள். சொந்தங்கள், நண்பர்கள் தேடி வந்து உறவு பாராட்டுவார்கள். ஒரு சிலர் உங்களிடம் கடனாக ஒரு தொகையை பெற்றுக்கொண்டும் செல்வார்கள். வண்டி, வாகனங்களுக்கு எதிர்பாராத பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தொழில் அல்லது பணியிடங்களில் மற்றவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு

செலவுகளை சமாளிக்க தடுமாறும் வாரம் இது. தொழில்துறையினர் தொழில் விரிவாக்க முயற்சிகளை தள்ளிப்போட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். தொழில் அல்லது உத்தியோகம் காரணமாக ஒரு சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியிலிருந்து விலகி விடலாமா என்ற எண்ணத்தை கட்டாயம் தவிர்த்து விட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருந்தால் அளவோடு வாங்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்பவர்கள் அதிக வேகத்தை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வாரம் இது.

மகரம்

புதிய வாய்ப்புகள், நல்ல நம்பிக்கைகள் வாழ்வில் உருவாகும் தருணம் இது. மனதில் புதிய நம்பிக்கை துளிர் விடும். இருந்தாலும் மனதில் ஒருவித குழப்பம் நிலவுவதை தவிர்க்க இயலாது. பலரும் உங்களது ஆலோசனைகளை பெற்று செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள், தொழில்துறையினர் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் அகலும். குழந்தைகள் கல்வியில் சாதிப்பார்கள். கண்கள், அடி வயிறு, கால்கள் ஆகியவற்றில் நோய்கள் ஏற்பட்டு சிகிச்சையால் குணமாகும். உறவினர் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். தொலைபேசியில் பேசுவதன் மூலம் பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த நண்பரை சந்திப்பீர்கள்.

கும்பம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பும், லாபமும் வந்து சேரும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்ன உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்ற மனக்குறையுடன் பணியாற்றுவார்கள். குடும்பம், தொழில், உத்தியோகம் ஆகிய எதுவாக இருந்தாலும் மனதின் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க வேண்டும். செலவுக்கேற்ற பணம் கைகளுக்கு எப்படியாவது வந்து விடும். தொழில் கடன், வீட்டுக்கடன், நகைக்கடன் போன்ற கடன்களுக்கு வட்டி மட்டுமே செலுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும். பணம் விஷயத்தில் மற்றவர்களை நம்பி எவ்வித காரியத்திலும் இறங்க வேண்டாம். மற்றவர் கடனுக்காக ஜாமீன் கையெழுத்தும் இட வேண்டாம்.

மீனம்

கோவில், குளம், சுப காரியங்கள் என்று இவ்வாரம் உற்சாகமாக இருக்கும். வெளியில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ள மனச்சங்கடங்களை நினைத்து தனிமையில் வருந்துவதை யாரும் அறிய மாட்டார்கள். பல விஷயங்களில் சுயமாக சிந்தித்து தனியாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வராமல் போவது, வரவை விட செலவுகள் அதிகமாக இருப்பது என்ற நிலையை சமாளிக்க வேண்டிய காலகட்டம் இது. மனதில் ஏற்பட்ட சங்கடங்களால் சரியான நேரத்துக்கு உணவு உண்ணுவதும் தாமதமாகும். இறைவழிபாட்டால் உங்கள் சங்கடங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.




 


Tags:    

மேலும் செய்திகள்