2 நாட்களில் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு


2 நாட்களில் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு
x

புதுவையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

புதுச்சேரி

புதுவையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

வேகமாக பரவுகிறது

புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பருவமழை தொடங்கும் முன்பே டெங்கு, மலேரியா வேகமாக பரவி வருகிறது.

புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம் ஆகும். எனவே, இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதுடன் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

சுகாதார துறை தீவிரம்

இந்தநிலையில் தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (வயது 28), குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பகுதியில் கொசுமருந்து அடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1,195 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story