ஓய்வு பெற்ற மின் ஊழியருக்கு 5 ஆண்டு சிறை


ஓய்வு பெற்ற மின் ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
x

மின்துறையில் ரூ.82 லட்சம் கையாடல் செய்த வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி

மின்துறையில் ரூ.82 லட்சம் கையாடல் செய்த வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ரூ.82 லட்சம் கையாடல்

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 61). ஓய்வு பெற்ற மின்துறை ஊழியரான இவர், கடந்த 2004-2005-ம் ஆண்டு காலத்தில் மின்துறை வருவாய் பிரிவு 3-ல் காசாளராக பணியாற்றினார். அப்போது பொதுமக்கள் செலுத்தும் மின் கட்டணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.82 லட்சத்து 17 ஆயிரம் கையாடல் செய்தார். இதற்கு மேல் அதிகாரியான பெருமாள் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அப்போதைய மின்துறை செயற்பொறியாளர் ராமலிங்கம் கடந்த 2007-ம் ஆண்டு ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக சுந்தரம், பெருமாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

5 ஆண்டு சிறை

அவர்கள் விசாரணை நடத்திய போது, சண்முகசுந்தரம் கையாடல் செய்த பணத்தில் அவரது மனைவி பெயரில் இடம் வாங்கியதும், வழக்கு விசாரணையின் போதே அந்த இடத்தை உழவர்கரை சார்-பதிவாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் உதவியுடன் வேறு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சண்முகசுந்தரத்தின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

2 பேர் சாவு

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெருமாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடந்த காலத்திலேயே இறந்து விட்டனர். எனவே அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் இந்த வழக்கில் வக்கீல் குமரேசன் ஆஜராகி வாதாடினார்.


Next Story