தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை


தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை
x

புதுச்சேரி அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்கள் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரி அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்கள் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.

தி.மு.க. பிரமுகர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க. இளைஞரணியில் செயல்பட்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார்.

இவரது மனைவி சரஸ்வதி. முன்னாள் பஞ்சாயத்து தலைவர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர்களின் மகன் சுகவனன் (25) வெளிநாட்டில் டாக்டருக்கு படித்தவர்.

வெட்டிக்கொலை

தினந்தோறும் அதிகாலை நேரத்தில் ஜெயக்குமார் டீ குடிப்பதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதிக்கு வருவது வழக்கம். அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிளில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

இரும்பை மகாலீஸ்வரர் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்தொடர்ந்து வந்து வழி மறித்தனர். கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்ததைப் பார்த்து ஜெயக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள ஏரி கரைக்கு ஓடினார். ஆனால் விரட்டிச் சென்று ஜெயக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றது.

உடல் முழுவதும் வெட்டுக்காயமடைந்த ஜெயக்குமார் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓடி வந்து பார்த்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

பதற்றம்- போலீஸ் குவிப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் ஜாக்கி வரவைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மகாலீஸ்வரர் கோவிலை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலை நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் கிடைக்குமா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்தால் ஜெயக்குமார் கொலைக்கான காரணங்கள் தெரியவரும்.

இதற்கிடையே ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

3 பேர் சிக்கினர்

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அரசியல் முன் விரோதமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஊரில் ஏற்பட்ட பிரச்சினையில் தலையிட்டு ஜெயக்குமார் சமரசம் செய்து வைத்துள்ளார். இதில் அதிருப்தி அடைந்த தரப்பினர் அவரை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த பயங்கர கொலை தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேர் நேற்று மாலை போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரின் சொந்த ஊரான கோட்டக்கரையில் பதற்றமான சூழ்நிலை இருப்பதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story