டாக்டர்கள், நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்


டாக்டர்கள், நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
x

காரைக்காலில் பணியிடை நீக்க நடவடிக்கையை கண்டித்து டாக்டர்கள், நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை இல்லாமல் நோயாளிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

காரைக்கால்

காரைக்காலில் பணியிடை நீக்க நடவடிக்கையை கண்டித்து டாக்டர்கள், நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை இல்லாமல் நோயாளிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

மாணவன் பலி

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாலமணிகண்டன் படிப்பில் திறமையாக இருந்து வந்தார். இதனால் பொறாமைப்பட்ட சக மாணவியின் தாயார் சகாயராணி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து அவனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது அலட்சியமாக செயல்பட்டதால்தான் மாணவன் உயிரிழந்தான். எனவே, போலீசார் மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவனின் பெற்றோர் மற்றம் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக மாவட்டம் தழுவிய பந்த் போராட்டமும் நடந்தது.

இதற்கிடையே, இதுதொடர்பாக விசாரித்த டாக்டர்கள் குழு அரசுக்கு அளித்த அறிக்கையின்படி டாக்டர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திடீர் போராட்டம்

அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெறக்கோரியும் காரைக்கால் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு முடங்கியது. இதனால் அங்கு வந்து இருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்கால் தவிப்புக்குள்ளானார்கள்.

நீண்ட வரிசையில் காத்திருந்து விட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்களின் அறிவிப்பை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் டாக்டர்கள், நர்சுகளின் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story