விவசாயி தீக்குளிக்க முயற்சி


விவசாயி தீக்குளிக்க முயற்சி
x

கண்டமங்கலம் அருகே நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டமங்கலம்

நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நான்குவழிச்சாலை பணி

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கண்டமங்கலம் அருகே கெங்கராம்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இரு புறங்களிலும் விவசாய நிலங்களை கையகப் படுத்தப்பட்டன.

இந்தநிலையில் கண்டமங்கலம், வளவனூர் ஆகிய பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை போல், தங்களுக்கும் கூடுதலாக இழப்பீட்டு தொகை கேட்டு கெங்கராம்பாளையம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் இன்று காலை டோல்கேட் அமைக்கும் பகுதிக்கு 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். அவர்கள், நான்கு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு அதிக படியான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னமாங்குப்பத்தை சேர்ந்த விவசாயி சந்தியமூர்த்தி, திடீரென்று கேனில் எடுத்து வந்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வளவனூர் போலீசார் அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அகற்றினர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் சிவ குமார் ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். கூடுதல் இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story