கஞ்சா விற்றதாக சிறுவன் உள்பட 4 பேர் கைது


கஞ்சா விற்றதாக சிறுவன் உள்பட 4 பேர் கைது
x

அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா விற்றதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா விற்றதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆபரேஷன் விடியல்

புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் "ஆபரேஷன் விடியல்" என்கிற பெயரில் கஞ்சா விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை ஓட்டி பி.சி.பி.நகர் உள்ளது. இந்த பகுதியில், படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக, இன்ஸ்பெக்டர் முத்துகுமரனுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

சிறுவன் உள்பட 4 பேர் கைது

அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் பள்ளிக்கு எடுத்து செல்லும் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தினகரன் (வயது 23), விஸ்வா (22) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரிய வந்தது. ரெட்டியார்பாளையம் பவழன்சாவடியை சேர்ந்த கணபதி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கணபதியை போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். ஒரே மாதத்தில் 9 பேரை கஞ்சா வழக்கில் அரியாங்குப்பத்தில் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் நிருபர்களிடம் கூறியது:-

குண்டர் சட்டம் பாயும்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்துதான் கஞ்சா வாங்கி வருவதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனவே, அங்கிருந்து யார் கஞ்சா விற்பனை செய்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பாகூர் பகுதியில் நடைபெற்ற பைனான்சியர் கொலையில் குறிஞ்சிபாடியை சேர்ந்த சிலர் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் யார் இந்த கொலையில் தொடர்புடையவர்கள்? என தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story