மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன்


மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன்
x

மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

குழு விவாதம்

இந்திய தணிக்கை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் குழு விவாதம் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை பொது தணிக்கையாளர் ஆனந்த் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குழு விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விதிகளில் மாற்றம்

தணிக்கை என்பது எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்ற ஒரு அறிக்கை. அரசு சிறப்பாக செயல்பட தணிக்கை மிகவும் அவசிய மானது. கணக்குகளில் என்னென்ன குறைபாடுகள் உள்ளது? அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்று கண்டறிந்து குறைபாடுகளை களையும் போது அரசுக்கு பயனுள்ளதாக அமையும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்காக சில நேரங்களில் விதிகளை மீறி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மக்களுடைய நலனுக்காக விதிகளை மாற்றம் செய்யும்போது, அதனை தணிக்கை துறை யினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆலோசனை கூற வேண்டும்

மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் குறைபாடு இருந்தால் ஆலோசனைகளை கூற வேண்டும். அதையே குற்றச்சாட்டாக வைத்து தண்டிக்க கூடியதாக தணிக்கை துறை யினர் இருக்கக்கூடாது. இதேபோல் தலைமை செயலாளர், செயலாளர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோருக்கு ஆலோசனை தெரிவிக்கும் வகையில் அவர்களை வைத்தும் கூட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மாநில அந்தஸ்து

விழா முடிவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர் களிடம் கூறுகையில், 'புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அதனை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரி வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து மிக அவசியமான ஒன்று. எனவே, மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவது என்னுடைய கடமை. மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது' என்றார்.


Next Story