புதுச்சேரி-காரைக்காலில் 23-ந்தேதி பள்ளிகள் திறப்பு


புதுச்சேரி-காரைக்காலில்  23-ந்தேதி பள்ளிகள் திறப்பு
x

புதுவை, காரைக்காலில் வருகிற 23-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி

புதுவை, காரைக்காலில் வருகிற 23-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

எதிர்பார்ப்பு

தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவையில் தமிழக பாட திட்டமே பின்பற்றப்படுகிறது. தேர்வுகள் முடிந்து வருகிற 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? என மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

23-ந்தேதி பள்ளிகள் திறப்பு

புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 5-ந்தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி வரும் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 23-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். இது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற 17-ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கப்படும். புதிதாக 70 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்துள்ளோம்.

இந்த கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது. புதுவையில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்த ஆலோசனையும் உள்ளது. இந்த பாடத்திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்ற தேவை இருக்காது.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.


Next Story