புதுவை பட்ஜெட் ரூ.10,600 கோடிக்கு அனுமதி


புதுவை பட்ஜெட் ரூ.10,600 கோடிக்கு அனுமதி
x

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில் கடந்த நிதியாண்டில் ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

புதுச்சேரி

யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் புதுவை அரசு இருந்து வருகிறது.

புதுச்சேரி பட்ஜெட்

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில் கடந்த நிதியாண்டில் ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்த நிதியாண்டிற்கு ரூ.1,723 கோடியை புதுவை அரசுக்கு மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஒதுக்கிய நிலையில் பட்ஜெட்டை தயார் செய்ய மாநில திட்டக்குழு கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.3 ஆயிரம் கோடியாக கணக்கிடப்பட்டு ரூ.11 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது.

ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி

இந்த பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெறுவதற்கான கோப்பு கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.

எப்படியும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதியை சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு கடந்த போதிலும் முதல் அமைச்சர் ரங்கசாமி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்காமல் இருந்து வந்தார்.

இந்த சூழலில் பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதமானதால் அரசுக்கு நிர்வாக நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும் புதுவை மாநிலத்துக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கவேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார்.

சட்டசபை ஒத்திவைப்பு

இந்த சந்திப்பு முடிந்து உடனடியாக ரங்கசாமி புதுவை திரும்பினார். ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று முன்தினம் புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கூடியது. கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், பட்ஜெட் தாக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு ஒப்புதல்

பதவியேற்ற பின் 15 மாதங்களுக்கு பிறகு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்து வந்த நிலையில் புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுவை அரசால் ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.10 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பற்றாக்குறையான ரூ.400 கோடியை கடனாக பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக வருகிற 17-ந்தேதி மீண்டும் சட்டசபை மீண்டும்கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story