தீபாவளி உதவித்தொகை வழங்கக்கோரி புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் போராட்டம்


தீபாவளி உதவித்தொகை வழங்கக்கோரி புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் போராட்டம்
x

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக தீபாவளி உதவித்தொகை வழங்க வேண்டும் என புதுச்சேரியில் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் தீபாவளி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக அந்த தொகை சரிவர வழங்கப்படவில்லை. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த ஆண்டு இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் அரசை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அரசு இனியும் காலம் கடத்தாமல் கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் 3 ஆயிரத்து 500 ரூபாய், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உடனடியாக தீபாவளி உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த பணத்தை தீபாவளிக்கு முன்னதாக வங்கியில் செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடதப்பட்டது.

அதன்படி ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. தொழில்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் சட்டசபை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை தடுப்பு கட்டைகளை போட்டு போலீசார் தடுத்தனர். பின்னர் அவர்கள் ஆம்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் தீபாவளி உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி, பெரியக்கடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் துறை செயலர் வந்து இன்று மாலைக்குள் தீபாவளி உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறினர். இதனயைடுத்து முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


Next Story