நெல், உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின


நெல், உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின
x

பாகூர் பகுதியில் 16.5 செ.மீ. மழை பதிவானது. நெல் மற்றும் பச்சை பயிர் வயலுக்குள் மழை தண்ணீர் தேங்கியது.

பாகூர்

பாகூர் பகுதியில் 16.5 செ.மீ. மழை பதிவானது. நெல் மற்றும் பச்சை பயிர் வயலுக்குள் மழை தண்ணீர் தேங்கியது. திருபுவனை சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

புதுச்சேரி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று திடீரென கருமேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு 8:30 மணி முதல் தொடர் மழை பெய்து வந்தது.

இந்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்கள், வீடுகள் தெருக்கள், சாலைகள் என பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு அருகில் உள்ள தாழ்வான பகுதியில் 50 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

பாகூர் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. கோடைக்காக பச்சை பயிர், உளுந்து, எள்ளு, மணிலா பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. அவை அறுவடை செய்ய முடியாத சூழ்நிலைஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அணைக்கட்டில் வழிந்தோடும் தண்ணீர்

சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்த தண்ணீரை வடிகால் வாய்க்கால் வழியாக கொண்டு வந்து சித்தேரி அணைக்கட்டை திறந்து வெளியேற்றி வருகின்றனர்.

தொடர் மழையால் காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பாகூர் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டு பல மணி நேரமாக மின்சாரம் இன்றி இரவு பகலும் மக்கள் தவித்தனர்.

பாகூர் நீர்ப்பாசன பிரிவு அறிவிப்பின்படி நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மிக அதிகமாக 16.5 செமீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் அதிக பட்சமாக மழை பெய்தது இதுதான் முதல் முறை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி-விழுப்புரம் இடைய 4 வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி திருபுவனையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருபுவனை ஏரிக்கரையில் உள்ள பனைமரங்களை அகற்றாமல் சாலையின் தெற்கு புறத்தில் ஒருவழிப்பாதை அமைத்து மேம்பாலம் அமைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம் பகுதியில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக திருபுவனை ஒரு வழிப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மழை காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாரச்சந்தை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் கடை வைக்க முடியாததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


Next Story