ஆரோவில் மாத்ரி மந்திரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு


ஆரோவில் மாத்ரி மந்திரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

ஆரோவில்லுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு மாத்ரி மந்திரில் சிறிது நேரம் தியானம் செய்தார்.

புதுச்சேரி

ஆரோவில்லுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு மாத்ரி மந்திரில் சிறிது நேரம் தியானம் செய்தார்.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். ஜிப்மரில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவியை தொடங்கிவைத்ததுடன் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மாலையில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிட்ட அவர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். 2-வது நாளான இன்று காலை அவர் அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டார்.

ஆரோவில்

அதன்பின் புதுவையில் இருந்து தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லுக்கு சென்றார். அவரை ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து மாத்ரி மந்திரை (தியான மண்டபம்) ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

அதன்பின் தியான மண்டபத்திற்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து வெளியே வந்த அவர், மாத்ரி மந்திர் வளாகத்தில் மரக்கன்று நட்டார். தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மதிய உணவு சாப்பிட்டார். சிறிது நேர ஓய்வுக்குப்பின் ஆரோவில் நகர கண்காட்சியை பார்வையிட்டார்.

கருத்தரங்கம்

தொடர்ந்து பாரத் நிவாசில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி நடந்த ஆன்மிக கருத்தரங்கை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், கலெக்டர் பழனி, ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் சிறிதுநேரம் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து விடைபெற்றார். கார் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு சென்றார்.

வழியனுப்பினர்

விமான நிலையத்தில் அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், கலெக்டர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஜனாதிபதி ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.


Next Story