தடையை மீறி இறைச்சி, சாராயம் விற்பனை


தடையை மீறி இறைச்சி, சாராயம் விற்பனை
x

புதுச்சேரியில் நேற்று தடையை மீறி இறைச்சி, சாராயம் விற்கப்பட்டது. அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று தடையை மீறி இறைச்சி, சாராயம் விற்கப்பட்டது. அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.

இறைச்சி, மீன் கடைகள்

வள்ளலார் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று இறைச்சி, மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி பெரியமார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது.

இதனால் அங்கு இறைச்சி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதே நேரத்தில் புதுச்சேரி நகர பகுதியில் சாலையோர ஆடு, கோழி மற்றும் மீன் கடைகள் அதிகாலை முதல் வழக்கம்போல இயங்கின.

அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளிலும் இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடந்தது.

அபராதம்

தகவல் அறிந்த புதுச்சேரி நகராட்சி சுகாதார அதிகாரி துளசிராமன் தலைமையில் 2 குழுவினர் சோதனை நடத்த வந்தனர். இதை அறிந்த இறைச்சி கடைக்காரர்கள் அவசர கோலத்தில் இருப்பு வைத்திருந்த இறைச்சிகளை அப்புறப்படுத்தி மறைத்து வைத்தனர். ஆனால் அதிகாரிகள் இதை கண்டுபிடித்து தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு ரூ5 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்பேரில் சுகாதார அதிகாரி ஜெய்சங்கர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர். அப்போது தடையை மீறி இறைச்சி விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாராயம் விற்பனை

புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தாராளமாக மது, சாராயம் விற்கப்படுவதாக கலால்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில் தாசில்தார்கள் மாசிலாமணி, சரவணன், சிலம்பரசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சோரியாங்குப்பம், அரியாங்குப்பம், அய்யங்குட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் தடையை மீறி சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. கலால்துறை அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் 3 பேரை மடக்கிப்பிடித்து அவர்களிடம் இருந்து 27 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.38 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story