புதுவையில் கஞ்சா விற்பனை - நெய்வேலியை சேர்ந்த 6 பட்டதாரி வாலிபர்கள் கைது


புதுவையில் கஞ்சா விற்பனை - நெய்வேலியை சேர்ந்த 6 பட்டதாரி வாலிபர்கள் கைது
x

புதுவையில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக நெய்வேலியை சேர்ந்த 6 என்ஜினியரிங் பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாகூர் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் பாகூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தமிழக பகுதியான நெய்வேலியை சேர்ந்த சூர்யா (வயது 23), வசந்த் (21), ஜெர்விஸ் (23) என தெரியவந்தது. மேலும் சூர்யா கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு 3 பேர் கொண்ட கும்பல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு கிலோ கணக்கில் கஞ்சா எடுத்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து சூர்யா மூலமாக போலீசார் மற்றும் 3 பேரை தொடர்பு கொண்டு கஞ்சா வாங்குவதுபோல் வரவழைத்து அநத கும்பலை பொறிவைத்து பிடித்தனர். பின்னர் அந்த கும்லையும் பாகூர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கும்பலும் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் மோகன் (26), கோபால் (22), சந்துரு (23) என்பதும், ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் கைது செய்து 6 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சம் ஆகும். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டிப்ளமோ, என்ஜினியரிங் படிப்பை முடித்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story