ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்


ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்
x

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதற்காக 22-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதற்காக 22-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிற்சி வகுப்புகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது மத்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதுவையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் படித்த வேலையற்ற எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த வேலை தேடுபவர்களுக்கு கீழ்காணும் சிறப்பு பயிற்சி திட்டங்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் தலை சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

போட்டி தேர்வுக்கு எஸ்.சி. எஸ்.டி. வகுப்பை சேர்ந்த வேலை தேடும் நபர்களுக்கு 11 மாத கால சிறப்பு இலவச பயிற்சி திட்டம் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பு, கல்லூரி வகுப்பை முடித்தவர்கள் மற்றும் வயது வரம்பு 18 முதல் 27 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சியின் நோக்கம் குரூப் சி பதவிகள், டி.என்.பி.எஸ்.சி. மற்றும் பிற ஆட்சேர்ப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் காலிப்பணியிடங்களுக்கான பல்வேறு போட்டி தேர்வுக்கு தயார்படுத்துதல் ஆகும். மேலும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வரவேற்பு

ஓராண்டு கால கணினி மென்பொருள் பயிற்சி மற்றும் கணினி வன்பொருள் பயிற்சி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பை சேர்ந்த வேலை தேடும் நபர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டம் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகையுடன் வழங்கப்பட உள்ளது. மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் வயது வரம்பு 18 முதல் 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். வகுப்புகள் தினமும் மாலையில் 2 மணி நேரம் நடைபெறும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களுக்கு, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், 2-வது தளம் ரெட்டியார்பாளையம் என்ற முகவரியை அணுக வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story