கடவுச்சொல்லை திருடி 10 கடைகளுக்கு அனுமதி


கடவுச்சொல்லை திருடி   10 கடைகளுக்கு அனுமதி
x

தொழிலாளர் துறை அதிகாரியின் கடவுச்சொல்லை திருடி 10 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

தொழிலாளர் துறை அதிகாரியின் கடவுச்சொல்லை திருடி 10 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைகளுக்கு அனுமதி

புதுவை தொழிலாளர் துறை அமலாக்க பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகேந்திரவர்மன். இவர் புதுச்சேரியில் கடைகளுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குதல், புதுப்பித்தல் குறித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தகவல்களை பெற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்க பரிந்துரை செய்வார்.

இந்த நிலையில் மகேந்திரவர்மன், தனது கடவுச்சொல்லை பயன்படுத்தி கணினியில் ஆய்வு செய்தபோது, தனக்கு தெரியாமல் 10 கடைகளுக்கு அனுமதி அளித்திருப்பது தெரியவந்தது.

கடவுச்சொல்லை திருடி...

அதாவது, மகேந்திரவர்மன் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவு சான்றிதழ் வழங்குவதற்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) மர்ம நபர்கள் யாரோ திருடி சட்டவிரோதமாக 10 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதை அறிந்த மகேந்திரவர்மன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடவுச்சொல் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நூதன மோசடி குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் மகேந்திரவர்மன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story