வங்கி ஊழியரின் காரை அடகு வைத்த டிரைவர்


வங்கி ஊழியரின் காரை அடகு வைத்த டிரைவர்
x

பாகூர் அருகே வங்கி ஊழியரின் காரை இரவலுக்கு வாங்கிய டிரைவர் அடகு வைத்து மோசடி செய்தார்.

பாகூர்

பாகூர் அருகே வங்கி ஊழியரின் காரை இரவலுக்கு வாங்கிய டிரைவர் அடகு வைத்து மோசடி செய்தார்.

வங்கி கேஷியர்

பாகூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஞானசக்தி ராஜா (வயது 36). இவர் வில்லியனூரில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கயல்விழி பாகூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார்.

ஞானசக்திராஜா தனது மாமனார் பெயரில் உள்ள காரை பயன்படுத்தி வந்தார். அந்த காரை செஞ்சியை சேர்ந்த டிரைவர் ஆரோக்கியநாதன் ஓட்டி வந்தார். நன்கு பழகி வந்ததால் அவரை ஞானசக்திராஜா முழுமையாக நம்பினார். இதனை பயன்படுத்தி ஆரோக்கியநாதன் தனது சொந்த வேலைக்காக 2 நாட்கள் கார் வேண்டுமென்று கேட்டுள்ளார். இதனை நம்பி காரை வாடகை இன்றி அவரிடம் ஞானசக்திராஜா கொடுத்தார்.

அடகு வைத்து மோசடி

ஆனால் 2 நாட்கள் ஆன பிறகும் காரை ஆரோக்கியநாதன் ஒப்படைக்கவில்லை. இது குறித்து கேட்டபோது, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று சில காரணங்களை கூறியுள்ளார். இந்த நாட்களுக்கு வாடகை தருவதாக ஆரோக்கியநாதன் தொிவித்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும், காரை ஒப்படைக்காமல் ஆரோக்கியநாதன் ஏமாற்றி வந்தார்.

இந்த நிலையில் சிறுவந்தாடு பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் மதன் என்பவர் ஞானசக்திராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களது காரை ஆரோக்கியநாதன் தன்னிடம் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். எனவே பணத்தை கொடுத்துவிட்டு காரை மீட்டு செல்லுமாறு கூறினார்.

போலீசில் புகார்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஞானசக்திராஜா தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story