மாதத்தின் கடைசி வேலைநாள் புத்தகமில்லா தினம்


மாதத்தின் கடைசி வேலைநாள் புத்தகமில்லா தினம்
x

புதுவையில் மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டும்.என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களை விளையாட்டு, வினாடி-வினா ஆகியவற்றில் ஊக்கப்படுத்தவும் புத்தகமில்லா தினம் கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து வருடத்தில் 10 நாட்கள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுக்கு 10 நாட்கள் புத்தகமில்லா நாட்களாக கடைபிடித்து கலை, வினாடி-வினா, கைவினை, விளையாட்டுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்கவேண்டும். ஒருவேளை அது விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய தினத்தை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்கவேண்டும். அந்த நாளில் மாணவர்களை புத்தகப்பை கொண்டு வர கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story