கடற்கரை, பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கடற்கரை, பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

காணும் பொங்கலை முன்னிட்டு புதுவை கடற்கரை, பூங்காக்களில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விளையாடுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டினார்கள்.

புதுச்சேரி

காணும் பொங்கலை முன்னிட்டு புதுவை கடற்கரை, பூங்காக்களில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விளையாடுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டினார்கள்.

காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தையை நாள் போகி, அடுத்து தைப் பொங்கல், மாட்டு பொங்கல், 4-வது நாள் கன்னி பொங்கல் எனும் காணும் பொங்கல் ஆகும்.

அதன்படி, பொங்கல் திருநாளின் கடைசி விழாவான காணும் பொங்கல் புதுச்சேரி மக்களால் கொண்டாடப்பட்டது. சாதி, பேதமின்றி அனைவரும் கொண்டாடும் விழா இது. இதையொட்டி வீட்டில் இருக்கக்கூடிய இளம்பெண்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு கடற்கரை, ஆறு, பூங்கா என நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர்.

கடற்கரையில் குவிந்தனர்

காணும் பொங்கலை முன்னிட்டு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கிராம பகுதிகளில் உள்ளவர்களும் குடும்பம் குடும்பமாக புதுச்சேரிக்கு வந்தனர். வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் குவிந்தனர். நேற்று காலை முதல் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளை அதிகம் காண முடிந்தது.

மணக்குள விநாயகர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவுப்பொருட்களை எடுத்து வந்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி விளையாடுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டினர்.

காதல் ஜோடி வலம்

நகரின் சுற்றுலா தலங்களான பூங்காக்களில் காதல் ஜோடிகளும் வலம் வந்தனர். தங்களது காதலை வெளிப்படுத்தும் வகையில் பிடித்த உணவு மற்றும் இனிப்பு வாங்கி வந்து ஒருவருக்கொருவர் ஊட்டி அன்பை பகிர்ந்தனர். புதிதாக திருமணம் ஆன இளம் தம்பதிகளும் குடும்பத்துடன் கடற்கரை மற்றும் பூங்காக்களில் உலா வந்தனர்.

புதுச்சேரி நகர தெருக்களில் ஆங்காங்கே விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் புதிதாக முளைத்தன. கிராமப் புறங்களில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் நகரப்பகுதிக்கு காணும் பொங்கலை கொண்டாட ஏராளமானோர் வந்திருந்தனர். நகர் பகுதி முழுவதும் நேற்று வெளிமாநில பதிவெண்கள் கொண்ட கார்கள் ஏராளமாக வலம் வந்தன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலில் குளிக்க தடை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சிலர் தலைமை செயலகம் எதிரிலும், பழைய துறைமுக பகுதியிலும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி நகரப்பகுதியில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் ஓட்டல்களிலும் மக்கள் அதிகம் கூடினர். சண்டே மார்க்கெட்டிலும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

புதுச்சேரியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இன்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் சுற்றுலா தலங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story