சினிமா செய்திகள்

திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி + "||" + Talented actors: "Surya and Karthi are Pleasant to interact" - Interview with actress Rakul Prith Singh

திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி

திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி
சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள் என நடிகை ரகுல் பிரீத்சிங் கூறினார்.
கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடித்துள்ள ‘தேவ்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி நடிகை ரகுல் பிரீத்சிங் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“கார்த்தியுடன் ஏற்கனவே நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மீண்டும் அவருடன், ‘தேவ்’ படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தேவ்,’ வித்தியாசமான காதல் கதை.


எனக்கு வலுவான கதாபாத்திரம். நடுத்தர குடும்பத்து பெண்ணாக வருகிறேன். நானும், கார்த்தியும் வெவ்வேறு இலக்குகளில் பயணிப்போம். எங்கள் சந்திப்பையும், காதலையும் படம் பிரதிபலிக்கும். இந்த படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இது ஒரு பயண கதையாகவும் இருக்கும். படத்தில் பயணப்பாடல் ஒன்று உள்ளது. அதை பல்வேறு ஊர்களில் படமாக்கினார்கள்.

நான் சூர்யாவின் தீவிர ரசிகை. அவருடன், ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து இருக்கிறேன். சூர்யாவும், கார்த்தியும் திறமையான நடிகர்கள். பழகுவதற்கும் இனிமையானவர்கள். ‘என்.ஜி.கே’ படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவம். சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். நான் ஓட்டல் திறக்கப்போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஐதராபாத்திலும், விசாகப்பட்டினத்திலும் இரண்டு ‘ஜிம்’களை ஆரம்பித்து இருக்கிறேன்.

மேலும் பல இடங்களில் ‘ஜிம்’ தொடங்க விருப்பம் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழி படங்களில் நடிப்பதால் நேரம் இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன். வாழ்க்கை வரலாறு படங்கள் வரிசையாக வருகின்றன. எனக்கும் அதுபோன்ற படங்களில் நடிக்க ஆசைதான். ஸ்ரீதேவி வாழ்க்கையை போனிகபூர் படமாக எடுக்க இருக்கிறார். எனக்கு ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

படங்கள் தயாரிக்கும் எண்ணம் இல்லை. உடல் ஆரோக்கியம் முக்கியம் ஒவ்வொருவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.