அவெஞ்சர்ஸை ஆட்டிப்படைக்கும் ஆறு கற்கள்


அவெஞ்சர்ஸை ஆட்டிப்படைக்கும் ஆறு கற்கள்
x
தினத்தந்தி 6 April 2019 2:30 AM GMT (Updated: 5 April 2019 11:25 AM GMT)

மார்வெல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரைப்படங்களில் பல சூப்பர் ஹீரோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தனித்தனியாக பிரிந்து நின்று உலகை காக்க போராடும் சூப்பர் ஹீரோக்களை, ஒன்றிணைத்து போராடும் விதமாக ‘அவெஞ்சர்ஸ்’ வரிசை படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அத்தனை சூப்பர் ஹீரோக்களை மிஞ்சும் வகையில், ‘அவெஞ்சர்ஸ்: இன் பினிட்டி வார்’ என்ற படத்தில் தானோஸ் என்ற மாபெரும் சக்தி வாய்ந்த வில்லனை அறிமுகம் செய்தனர். இந்தப் படங்கள் அனைத்தும் காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி மிக்க சூப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு படங்களிலுமே, இன்பினிட்டி ஸ்டோன்ஸ் பற்றிய தகவல்கள் இருக்கும். ஆனால் அவற்றைப் பற்றி வெளிப்படையாக எந்தப் படத்திலும் விளக்கியிருக்க மாட்டார்கள். ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படத்தில், வில்லன் தானோஸ் அந்த கற்களைத் தேடி அலையும் போதுதான், அதற்குள் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது, படம் பார்ப்பவர்களுக்குத் தெரிய வரும்.

அந்த இன்பினிட்டி கற்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாகவும் இருக்காது. அதை யாரும் கையால் தொட முடியாது. அப்படி தொட்டால் சக்தியை தாங்க முடியாமல் அழிந்து போவார்கள். எனவே அந்த கற்கள், ஏதாவது ஒரு பொருளுக்குள் இருக்கும். உதாரணமாக சிப்பிக்குள் இருக்கும் முத்து போலவோ, உறைந் திருக்கும் பனிக்கட்டியின் மையத்தில் இருப்பது போலவோ அல்லது கையில் வைத்திருக்கும் மந்திரக்கோலில் பதித்தோ வைக்கப்பட்டிருக்கும்.

‘இன்பினிட்டி வார்’ படத்தில் தானோஸ் மட்டும், அந்த கற்களை கையால் தொடுவார். அவர் சூப்பர் ஹீரோக்களை விடவும் மிகவும் சக்தி வாய்ந்தவர், கற்களின் தாக்கத்தை தாங்கும் சக்தி தானோஸுக்கு உள்ளது என்பதை தெரியப்படுத்தவும் அந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்தக் கற்களில் இருந்து வெளிப்படும் தாக்கத்தை தன்னால் தொடர்ந்து தாங்க முடியாது என்பதால், அதை அவர் தனது இடது கையில் பொருத்தியிருக்கும் ‘கான்லெட்’டில் (பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மெட்டல் கையுறை) வைத்திருப்பார்.

உலகையே தன் கட்டுப்பாட்டில் வைக்க உதவும், அதீத சக்தி படைந்த அந்த இன்பினிட்டி ஸ்டோன்ஸ், இதுவரை வந்த அவெஞ்சர்ஸ் படங்களில் முக்கிய பங்கு வகித்திருக்கும். இனி வரப்போகும் அவெஞ்சர்ஸ் வரிசை படங்களிலும் கூட இந்த கற்கள் முக்கிய பங்கை வகிக்கப்போகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்த இன்பினிட்டி கற்கள் மொத்தம் 6 இருப்பதாக ‘இன்பினிட்டி வார்’ படத்தில் தெரியப்படுத்தியிருப்பார்கள்.

இந்த 6 கற்களையும், தானோஸ்க்கு முன்பாக, ஓடின் சேகரித்து வைத்திருந்தார். இவர் விண்வெளியில் ஆஸ்கார்ட் என்ற கிரகத்தை ஆட்சி செய்தவர். அவெஞ்சர்ஸ் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் தோரின் தந்தை தான் ஓடின். இவர் தான் சேகரித்த 6 கற்களையும், தானோஸ் இடது கையில் பொருத்தியிருக்கும் கான்லெட் போன்று, வலது கையில் செய்து அதற்குள் வைத்திருந்தார். இதைப் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களில், தன்னுடைய நற்குணங்கள் மறைந்து, தீய குணங்கள் அதிகரிப்பதை ஓடின் உணர்கிறார். எனவே அந்த கற்களை அகற்றி விட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த தொடங்குகிறார். மேலும் வேறுயாரும் அந்த கற்களைப் பயன்படுத்தி, உலகிற்கு ஆபத்து விளைவித்து விடக்கூடாது என்பதால், அவற்றை வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து விடுவார். அவற்றைத்தான் தற்போது தானோஸ் தேடி அபகரித்து விட்டான். இந்த முன் கதை அனைத்தும் காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கின்றன. இனி வரும் ‘அவெஞ்சர்ஸ்’ வரிசை படங்களில் இந்தத் தகவல்கள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வந்த அவெஞ்சர்ஸ் படங்களிலும், இனி வரப்போகும் படங்களிலும் இன்பினிட்டி ஸ்டோன்ஸ் வகித் திருக்கும், வகிக்கப்போகும் முக்கிய பங்கினை இங்கே பார்க்கலாம்.

மைன்ட் ஸ்டோன்

ஆஸ்கார்டியன் இனத்தை எதிரியாகவும், உலகை ஆள வேண்டும் என்றும் நினைப்பவன் சிட்டாரி. இவனிடம் இருக்கும் கோலில் தான் ‘மைன்ட் ஸ்டோன்’ வைக்கப்பட்டிருக்கும். இந்த கோலை ‘சிட்டாரி செப்ட்டார்’ என்று படத்தில் குறிப்பிடுவார்கள். இந்த கோல், சிட்டாரியால் லோகிக்கு வழங்கப்பட்டது. அதை வைத்துதான், அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் சிட்டாரி படையினர் பூமிக்கு வருவதற்கு லோகி வழி செய்து கொடுப்பான்.

மைன்ட் ஸ்டோன் கொண்டு எவரையும் வசியப்படுத்தி அடிமையாக்கி விடமுடியும். இந்த சக்தியைக் கொண்டு தான் லோகி, தன் வேலையை முடிப்பதற்கு ஆராய்ச்சியாளர் செல்விக்கையும், கிளைன்ட் பார்ட்டனையும் தனக்கு அடிமையாக்கி கொள்வான். இவை அனைத்தும் அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் காட்டப்பட்டிருக்கும்.

தவிர இந்த கல்லானது, அளப்பறிய ஞானம் கொண்டது. அதனால் தான் இந்த கல்லைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் விஷன் என்ற சூப்பர் ஹீரோ, அதீத சக்திகளுடனும், அதிக ஞானத்துடனும் இருப்பதாக காட்டியிருப்பார்கள். விஷனின் காதலி ஸ்கார்லெட் விட்ச், அவளது சகோதரர் இருவருக்கும் இருக்கும் சக்தியும், இந்த மைன்ட் ஸ்டோன் மூலம் கிடைத்ததுதான். இவை அவெஞ்சர்ஸின் இரண்டாம் பாகமான ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான்’ படத்தில் தெரியப்படுத்தியிருப்பார்கள்.

ஸ்பேஸ் ஸ்டோன்

அவெஞ்சர்ஸ் வரிசை படங்களின் முதல் பாகமான, ‘தி அவெஞ்சர்ஸ்’ படத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த ‘ஸ்பேஸ் ஸ்டோன்.’ இது கடினமான கண்ணாடி போன்ற ஒன்றுக்குள் இருக்கும். இதை ‘டெஸராக்ட்’ என்பார்கள். இந்த டெஸராக்டை, அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்து வரும் நிக் பியூரி உத்தரவின் பெயரில் டாக்டர் செல்விக் என்பவர் ஆராய்ச்சி செய்வார். அப்பொழுது விண்வெளியில் இருந்து பூமிக்கு ஒரு துளை உருவாகி, அதன் வழியே தான் ‘தோர்’ படத்தில் வில்லனாக வரும் லோகி பூமிக்கு வருவார்.

இந்த ஸ்பேஸ் ஸ்டோனின் சக்தி என்னவென்றால், அதைப் பயன்படுத்தி எந்த கிரகத்திற்கும் பயணிக்க முடியும். அதுவும் நினைத்த நொடியில் செல்லலாம். இந்த கல், நிக் பியூரிக்கு எப்படி கிடைத்தது என்பதை, சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மார்வெல்’ திரைப்படத்தில் விளக்கியிருந்தார்கள்.

பவர் ஸ்டோன்

‘கார்டியன் ஆப் த கேலக்ஸி’ படத்தில், பவர் ஸ்டோன் முக்கிய பங்கு வகித்திருக்கும். அந்த படத்தில் தானோஸ், பவர் ஸ்டோனை எடுத்து வரும்படி ரோனனை அனுப்பியிருப்பான். ஆனால் அந்தக் கல்லைக் கைப்பற்றியதும், தானோஸை எதிர்க்கத் துணிவான், ரோனன். ஏனெனில் தானோஸை அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது, பவர் ஸ்டோன். ஸ்டார் லார்ட் அதை திருடி விற்றால் அதிக காசு கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருப்பான். அந்த சக்தி வாய்ந்த பவர் ஸ்டோன் ‘ஆர்ப்’ எனப்படும் பந்து வடிவ பொருளினுள் இருக்கும். இதை ‘கார்டியன் ஆப் த கேலக்ஸி’ முதல் பாகத்தில் காட்டியிருப்பார்கள். காமிக்ஸ் புத்தகத்தில், பவர் ஸ்டோன், மற்ற ஐந்து கற்களின் சக்தியை அதிகப்படுத்தப் பயன்படும் ஒன்றாகவே சொல்லப்பட்டிருக்கும். ‘இன்பினிட்டி வார்’ படத்தில்தான் அதன் சக்தியை பெரிதுபடுத்திக் காட்டியிருப்பார்கள்.

பவர் ஸ்டோனை கையால் தொட்டால், அவர்கள் பஸ்பமாகி விடுவார் கள். அந்த அளவிற்கு வீரியம் கொண்டது அது. ‘கார்டியன் ஆப் த கேலக்ஸி’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், பவர் ஸ்டோனை வைத்துதான் ஸ்டார் லார்ட் அணியினர், ரோனனை வீழ்த்துவார்கள்.

டைம் ஸ்டோன்

இந்த கல்லானது, ‘டாக்டர் ஸ்ட்ரேஜ்’ படத்தில் காட்டப்பட்டிருக்கும். கமர்தாஜ் நூலகத்தில் ஒரு நெக்லசுக்குள் இந்த ‘டைம் ஸ்டோன்’ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இந்த கல்லை, டாக்டர் ஸ்ட்ரேஜ் தன் வசப்படுத்திக் கொள்வார்.

டைம் ஸ்டோனின் சக்திகளை பற்றி விவரிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் அதன் பெயரிலேயே அனைத்தும் அடங்கி யிருக்கிறது. காலத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பது, காலத்தை கடந்து செல்வது என காலம் சம்பந்தப்பட்ட பல சக்திகளைக் கொண்டது இந்தக் கல். ஆறு ஸ்டோன்களில், டைம் ஸ்டோனின் சக்திதான், ‘டாக்டர் ஸ்ட்ரேஜ் மற்றும் ‘இன்பினிட்டி வார்’ போன்ற படங்களில் விரிவாக காண்பிக்கப்பட்டிருக்கும்.

ரியாலிட்டி ஸ்டோன்

இன்பினிட்டி ஸ்டோன்களில், திரவ நிலையில் இருப்பது இந்த ‘ரியாலிட்டி ஸ்டோன்.’ ‘தோர்: டார்க் வேர்ல்ட்’ படத்தில் இந்தக் கல் முக்கிய பங்கு வகிக்கும். மேல்கீத் என்பவன் இதைப் பயன்படுத்தி இருள் உலகின் சாம்ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விட முயற்சிப்பான். தோரின் காதலி ஏதேச்சையாக இந்தக் கல்லை கண்டறிய, அது அவளை தன்னுள் கிரகித்துக் கொள்ளும். பின்னர் அதில் இருந்து அவள் மீட்கப்படுவாள்.

ஒவ்வொரு இன்பினிட்டி கல்லும், ஒவ்வொரு விதத்தில் சக்தி மிக்கதாய் இருக்கும். ஆனால் இந்த ரியாலிட்டி ஸ்டோனைக் கொண்டு, நிறைய விஷயங்களை நமக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம். சாத்தியப்படுத்தலாம். இதைக் கொண்டு ஒரு மாயயை உருவாக்க முடியும். ‘இன்பினிட்டி வார்’ படத்தில் ஸ்டார் லார்ட் துப்பாக்கியால் கமோராவை சுடும் போது, துப்பாக்கியில் இருந்து குண்டுகளுக்கு பதிலாக சோப்பு குமிழிகள் வெளிவருவது, ட்ராஸ் உடல் சதுரங்களாக உடைந்து விழுவது பல வித்தைகளை, இந்த ரியாலிட்டி ஸ்டோன் கொண்டு தானோஸ் செய்திருப்பார்.

இந்த கல் பற்றி காமிக்ஸில் ஒரு கதை உள்ளது. தோரின் தந்தை ஓடின், இன்பினிட்டி ஸ்டோன்களை வெவ்வேறு கிரகங்களில் மறைத்து வைத்தார். அப்போது சிறு குழந்தையாக லோகியை கண்டெடுத்த ஓடின், அசுரத் தோற்றத்தில் இருந்த அவனை, ரியாலிட்டி ஸ்டோன் கொண்டு ஆஸ்கார்டியன் போல மாற்றினார். அவெஞ்சர்ஸ் படத்தில் லோகி செய்யும் சித்து விளையாட்டுக்களுக்கு ரியாலிட்டி ஸ்டோன்தான் காரணம் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆம்.. லோகி ஒரு நடனமாடும் ரியாலிட்டி ஸ்டோன்.

ஸோல் ஸ்டோன்

படங்களில் அதிகமாக காட்டப்படாததும், விவரிக்கப்படாததும் இந்தக் கல் தான். மற்ற இன்பினிட்டி ஸ்டோன்கள் எல்லாம் ஏதாவது ஒரு பொருளில் பதித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஸோல் ஸ்டோன் மட்டும் ஒரு இடத்தில் மறைந்திருக்கும். நாம் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒன்றைக் கொடுத்து தான், அந்த கல்லைப் பெற முடியும். இந்தக் கல் இப்படி மறைந்திருப்பதற்கு தோரின் தந்தை ஓடின் தான் காரணம்.

இந்தக் கல் எந்த ஆன்மாவையும் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி படைத்தது. இறந்த உயிர்கள் அனைத்தின் ஆன்மாவும் இந்த ‘ஸோல் ஸ்டோன்’ கல்லுக்குள் இருக்கும். இதை ஆன்மாக் களின் உலகம் என்றும் சொல்லலாம். ஆன்மாக்கள் அனைத்தும் இந்த உலகத்திற்குள் ஒரு வாழ்க்கை வாழும். இந்த கல்லுக்குள் இருந்து ஒரு ஆன்மாவைக் கொண்டு வந்து அந்த நபரை மீண்டும் உயிர்ப்பிக்கவும் முடியும். எனவே அடுத்து வெளிவர இருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: என்ட் கேம்’ படத்தில் இந்தக் கல் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Next Story