இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம்: நடிகர் ராஜ்கிரண் எதிர்ப்பு
இந்து கடவுள்களை விமர்சிப்பதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு பதில் அளித்து நடிகர் ராஜ்கிரண் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:–
‘‘கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தின் குறிக்கோளும் ஒன்றே. அது மனிதனை மேன்மைப் படுத்துவது. அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும். அதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
அந்த போதனைகளை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக சொல்கிறது. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவபெருமான், பார்வதித்தாய், விநாயகபெருமான், முருக பெருமானையெல்லாம் அவதார தெய்வங்களாக வழிபடச்சொல்வதன் மூலம் மனிதனை மேன்மைப்படுத்தும் போதனைகளை செய்கிறது.
இந்த அவதார தெய்வங்கள் மூலம் சொல்லப்படும் அனைத்து செய்திகளும் வாழ்க்கைத்தத்துவங்கள். அதற்குள் ஊடுருவி பார்த்தால்தான் உண்மைகள் புரியும். எல்லா மத தத்துவங்களையும் கசடற கற்று தெளியாமல் கடவுள் இல்லை என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டு போய் விட முடியாது. கற்றுத்தெளிய அரசியல்வாதிகளுக்கு நேரமும் இருக்காது.
பெரியார், மதங்களின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிப்பதற்கு வேறு வழியே இல்லாமல் கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தார் என்பது எனது கருத்து. பகுத்தறிவின் உச்சகட்ட மேம்பாடு அன்பும் மனிதநேயமுமாகவே இருக்கும்.’’
இவ்வாறு ராஜ்கிரண் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story