எம்.ஜி.ஆர்.-லதாவை விமர்சிப்பதா? கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் கண்டனம்
நடிகை கஸ்தூரி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.ஜி.ஆர்-லதாவுடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையானது.
நடிகை கஸ்தூரியை பலரும் கண்டித்து வருகிறார்கள். இதற்கு டுவிட்டரில் விளக்கம் அளித்த கஸ்தூரி, “எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளில் கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது. அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. இதில் யார் மனதும் புண்பட்டிருந்தால் மனதார வருந்துகிறேன்” என்றார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர், லதா பற்றி கூறிய கருத்துக்காக கஸ்தூரியை நடிகர் சங்கம் கண்டித்து அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், “மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் மூத்த கலைஞர்கள் வருத்தப்படும்படி எந்த செயலையும் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எம்.ஜி.ஆரையும் என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட கஸ்தூரியை கண்டிக்கிறேன். நான் 50 வருடமாக நடிக்கிறேன். எனக்கென்று மரியாதை உள்ளது. எம்.ஜி.ஆரை தெய்வமாக மதிக்கிற கோடானகோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் வருத்தப்படுவதுபோல் இப்படி எழுதலாமா? கஸ்தூரி நடித்த அளவுக்கு நான் எந்த படத்திலும் விரசமாக நடிக்கவில்லை. ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை அவமானப்படுத்தலாமா? கஸ்தூரிக்கு விளம்பரம் வேண்டுமென்றால் வேறு எதையாவது செய்யலாம்.”
இவ்வாறு லதா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story