‘கேன்ஸ்’ படவிழாவில் காஞ்சீபுரம் சேலையில் கங்கனா


‘கேன்ஸ்’ படவிழாவில் காஞ்சீபுரம் சேலையில் கங்கனா
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 5:55 PM GMT)

கேன்ஸ் படவிழாவில் கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

சர்வதேச அளவில் ஆஸ்கார், குளோப் திரைப்பட விருதுகளுக்கு அடுத்து கேன்ஸ் விருதுகள் உயர்வாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கேன்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கேன்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story