கொரோனா அச்சுறுத்தல் ‘’வெளியே செல்ல பயமாக உள்ளது” - நடிகை தமன்னா
கொரோனா அச்சுறுத்தலால் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறினார்.
கொரோனா ஊரடங்கில் நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
‘’மனதின் மூலம் தான் மனிதர்களுக்கு அழகு வருமே தவிர, வெளிப்புற தோற்றம், நிறம் இவற்றில் அழகு என்பது இல்லை. எனக்கு மனதில் அழகும் நன்னடத்தையும் இருப்பதால் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறேன். 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன்.
எனது திரையுலக வாழ்க்கையை இப்போது திரும்பி பார்த்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மனதுக்கு பிடித்த தொழிலை செய்ய வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் அந்த தொழிலுக்கு வரும் எல்லோருமே என்னை மாதிரி உயர்ந்த இடத்துக்கு வருவார்களா என்பது தெரியாது. எனக்கு கிடைத்து இருப்பதை அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் பாகுபலி படத்தில் நான் நடித்த அவந்திகா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்த படம் எனக்கு மிகவும் சவாலாகவும் இருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் சமையல் கற்று இருக்கிறேன்.
தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இப்போதைய சூழ்நிலையில் வெளியில் அடி எடுத்து வைக்கவே பயமாக உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்குக்கு செல்லும் நாளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் பாதுகாப்பும் முக்கியம்‘’
இவ்வாறு தமன்னா கூறினார்.
Related Tags :
Next Story