இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து


இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 13 July 2020 11:55 AM IST (Updated: 13 July 2020 11:55 AM IST)
t-max-icont-min-icon

கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று 66-வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து 7 ஆயிரத்து 500 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். 7 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவரது சாதனை தொகுப்பில் இருந்து சில வருமாறு:-

* பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்க’ என்ற பாடல் வைரமுத்துவால் 8 நிமிடத்தில் எழுதப்பட்டதாகும். மிகக் குறைந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல் இது.

* சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

* கவிதை, நாவல், சிறுகதை, திரைப்பாட்டு, கட்டுரை, பயண இலக்கியம், திரை வசனம், மொழி பெயர்ப்பு என்று பல்வேறு இலக்கிய வடிவங்களில் 38 படைப்புகளை வைரமுத்து படைத்திருக்கிறார்.

* கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாட்டுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாகத் திகழ்கின்றன.

* வைரமுத்து எழுதிய ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்னும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’ என்ற வரி கற்பனையின் உச்சமாகும் என்று ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் பாராட்டியிருக்கிறார்.

* இந்தியாவின் சிறந்த பாடலா சிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து.

• தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும் வைரமுத்து 6 முறை பெற்றிருக்கிறார்.

* ஒரு தனியார் அமைப்பு, கனடா அரசாங்கத்தோடு இணைந்து, கவிஞர் வைரமுத்துவின் தபால் தலையை டொரண்டோவில் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

*இவரது இலக்கிய பணிகளுக்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன.

* இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகள் பெற்ற ஒரே தமிழ்க் கவிஞராகத் திகழும் கவிஞர் வைரமுத்து.

* சிங்கப்பூர் அரசின் கல்வித் திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பாடுவேன் என்ற கவிதை தமிழ் பாடமாக விளங்குகிறது.

* புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய மூன்றாம் உலகப்போர், மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று தேந்தெடுக்கப்பட்டு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு பெற்றது.

* கவிஞர் வைரமுத்து எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூர் அதிபராயிருந்த எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் மறைவின்போது உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்த அரங்கில் அந்தப் பாடலை முழுதும் ஒலிபரப்பி அஞ்சலி செய்தது சிங்கப்பூர் அரசாங்கம்.

* ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, யுக்தாமுகி ஆகிய 4 உலக அழகிகளுக்குப் பாடல்கள் எழுதியவர். பிரியங்கா சோப்ரா சொந்தக் குரலில் இவரது பாடலைப் பாடி நடித்திருக்கிறார்.

* கவிதைக்கருகில் பாடலை நகர்த்தும் முயற்சிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவரது ‘இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாடல், தமிழ் மேடைகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பாடலாக விளங்குகிறது.

* சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்ட ரெயிலில் செங்கல்பட்டைச் சேர்வதற்குள் எழுதி முடித்து அடுத்தநாள் ஒலிப்பதிவுக்காக அவசரமாக தன் உதவியாளரிடம் கொடுத்தனுப்பிய பாட்டு, அமரன் படத்தின் சந்திரரே சூரியரே பாட்டு.

*தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.

* திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிகள், தீயின் தாகம், ஆனந்த தாகம், ராஜ மேகங்கள், அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, ரோஜாத் தீவுகள், பொன் வானம், ஜீவசொந்தம், சேலைப் பூக்கள், ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை, அழகான ராட்சசி, 50 கே.ஜி. தாஜ்மஹால் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

* தமிழில் வெளியான முதல் முப்பரிமாண படமான மை டியர் குட்டிச்சாத்தன் படத்திற்கு பாடல்கள் எழுதியவர்.

*இளையராஜா இசையமைப்பில் நிழல்கள் தொடங்கி புன்னகை மன்னன் வரை சுமார் 250 பாடல்கள்களை எழுதியிருக்கிறார்.

* ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களில் 85 விழுக்காடு பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதியவை.

* தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இந்திய இசையமைப்பாளர்களின் இசைக்கு தமிழ்ப் பாடல்கள் தந்தவர்.

* நட்பு - ஓடங்கள் - வண்ணக் கனவுகள் - அன்று பெய்த மழையில் - துளசி என ஐந்து படங்களுக்குக் கதை - வசனம் எழுதியிருக்கிறார்.

Next Story