அயோக்யா


அயோக்யா
x
தினத்தந்தி 16 May 2019 10:31 PM IST (Updated: 16 May 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

பணம் பணம் என்று பறக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. படம் "அயோக்யா" கதாநாயகன் விஷால், கதாநாயகி ராஷிகன்னா, டைரக்‌ஷன் வெங்கட் மோகன் இயக்கிய படத்திற்கான சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  சென்னை நகரையே தன் அராஜகத்தின் மூலம் மிரட்டி வைத்திருக்கும் தாதா, பார்த்திபன். இவருடைய கைத்தடியாக செயல்படுகிறார், அமைச்சர் சந்தானபாரதி. தனது எல்லையில், தனக்கு சவுகரியமாக, தன் அராஜகங்களுக்கு எல்லாம் அனுசரித்து போகும் ஒரு போலீஸ் அதிகாரி வேண்டும் என்று சந்தானபாரதியிடம் பார்த்திபன் கேட்கிறார். அதன்படி, வந்து சேருகிறார், விஷால்.

இந்த நிலையில், அவருக்குள் காதல் பூ பூக்கிறது. பறவைகள் சரணாலயம் நடத்தும் ராஷிகன்னா மீது காதல்வசப்படுகிறார். அவரும் இவரை நேசிக்கிறார். காதலியின் பிறந்தநாள் பரிசாக ஒரு பெண்ணை பார்த்திபனிடம் இருந்து விஷால் காப்பாற்றுகிறார். அதுவே விஷால்-பார்த்திபன் இருவரிடையே பகை வளர காரணமாகிறது.

பார்த்திபனின் தம்பிகள் 4 பேரும் ஒரு அப்பாவி பெண்ணை கடத்தி வந்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்து விடுகிறார்கள். அந்த பெண்ணின் முடிவுக்கு விஷாலும் ஒரு காரணமாகி விடுகிறார். இந்த கொடூர கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மாநிலம் முழுவதும் மகளிர் அமைப்புகளும், மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட, பிரச்சினை காட்டுத்தீயாக பரவுகிறது. பார்த்திபனின் தம்பிகள் 4 பேரையும் விஷால் தண்டிக்க முயற்சிக்கிறார். அவரிடம் இருந்தும், கோர்ட்டு தண்டனையில் இருந்தும் அந்த 4 பேரும் தப்பிவிடுகிறார்கள். அவர்களை விஷால் எப்படி சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறார்? என்பது யூகிக்க முடியாத ‘கிளைமாக்ஸ்.’

போலீஸ் அதிகாரி கர்ணன் வேடத்தில், விஷால். “இந்த கர்ணன் கொடுக்க மாட்டான்...இருப்பதை எல்லாம் எடுத்துக் கொள்வான்” என்ற அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது, விஷாலின் வில்லத்தனம். பணம்...பணம்...என்று தேடி அலையும் அவர், முக்கால்வாசி படம் வரை எதிர்மறை நாயகனாக வேறு ஒரு முகம் காட்டியிருக்கிறார். நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம். விஷால் வீடு கட்டி விளையாடி இருக்கிறார்.

சண்டை காட்சிகளில், சேவல் சிலிர்த்துக் கொண்டு படம் பார்ப்பவர்களையும் சிலிர்க்க வைக்கிறது.

கதாநாயகி ராஷிகன்னாவின் வட இந்திய முகம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இவருக்கும், விஷாலுக்குமான காதல் மனதில் ஒட்டவில்லை. அதை கனமான கதையம்சமும், காட்சிகளும் ஈடு செய்கின்றன. விஷாலின் வில்லத்தனங்களை பார்த்து, இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிற மூத்த போலீசாக கே.எஸ்.ரவிகுமார் வாழ்ந்திருக்கிறார்.

வில்லன் பார்த்திபன் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் கதைநாயகன் விஷால் செய்து விடுவதால், பார்த்திபன் களம் இறங்கி விளையாட சந்தர்ப்பம் இல்லை போலும். இருப்பினும் தன் தம்பிகளை நினைத்து வேதனைப்படும் காட்சியில், காமெடி கலந்து வில்லன் முகம் காட்டுகிறார். ஆனந்தராஜும் தமாஷ் வில்லன் ஆகியிருக்கிறார்.

சில நிமிடங்களே வந்தாலும் காமெடியில் கலக்கி விட்டு போகிறார், யோகி பாபு. எம்.எஸ்.பாஸ்கருக்கு நடிப்பு திறமையை காட்டக்கூடிய குணச்சித்ர கதாபாத்திரம். அனுதாபங்களை அள்ளுகிறார். ‘ஆடுகளம்’ நரேன், சந்தானபாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், சோனியா அகர்வால், தேவதர்சினி என நிறைய நட்சத்திரங்கள். சனாகானின் கவர்ச்சி ஆட்டமும் இருக்கிறது. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும், வி.ஐ.கார்த்திகின் ஒளிப்பதிவும் பதற்றம் கூட்டுகின்றன.

புதைக்கப்பட்ட விஷால், குழிக்குள் இருந்து உயிரோடு எழுந்து வருவது, ரத்தக்காயம் அடைந்த அவர் அதற்கான அடையாளம் எதுவும் இல்லாமல், அடுத்த நாள் ‘பளிச்’ முகத்துடன் கோர்ட்டுக்கு வருவது போன்ற சின்ன சின்ன குறைகள் தெரிகின்றன.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையின் விளிம்பில் உட்கார வைத்து, விறுவிறுப்பாக கதை சொன்ன டைரக்டர் வெங்கட் மோகனுக்கு பாராட்டுகள்.

Next Story