‘வாட்ஸ் ஆப்’ மூலம் வந்த வாய்ப்பு


‘வாட்ஸ் ஆப்’ மூலம் வந்த வாய்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 9:05 AM GMT)

சணல், துணிப்பை தயாரிக்கும் அந்தப் பயிற்சியை முடித்த பின்பு, வீட்டில் பழைய துணிகளை எடுத்துத் தைத்துப் பார்த்தேன். பை சிறப்பாகவே வந்திருந்தது. பிறகு பல வண்ணங்களில் பைகளைத் தைத்து, அவற்றை புகைப்படம் எடுத்து என்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் வைத்தேன்.

‘‘புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டு. அதனால் தான் குறுகிய காலத்தில் என்னால் தொழில் முனைவோராக வெற்றி பெற முடிந்தது’’ என்கிறார் பிரவீணா.

ஈரோடு அருகே உள்ள அந்தியூரைச் சேர்ந்த இவர் பைகள், கோப்புகள், பணப் பைகள், முக கவசங்கள், தாம்பூலப் பைகள் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். தற்போது நகைக் கடை
களுக்குப் பைகள் வடிவமைத்துக் கொடுக்கும் அளவுக்குத் தன்னை மேம்படுத்தி இருக்கிறார். கொரோனா பொது முடக்க காலத்திலும் தொய்வு இல்லாமல் தொழிலை நிர்வகித்த அவரிடம் பேசினோம்.

“திருமணத்துக்குப் பிறகு குடும்பத் தலைவியாக வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தேன். ஒருநாள் ரேடியோவில் வங்கி ஒன்றின் சார்பில் பைகள் தயாரிப்பு குறித்த, சிறுதொழில் பயிற்சி வழங்கப்படுவதாக 
அறிவிப்பு வந்தது. ஆர்வத்தோடு அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்தேன். 

தினமும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, பள்ளிக்குக் கிளம்புவது போல பயிற்சி மையத்துக்கு செல்வேன். சணல், துணிப்பை தயாரிக்கும் அந்தப் பயிற்சியை முடித்த பின்பு, வீட்டில் பழைய துணிகளை எடுத்துத் தைத்துப் பார்த்தேன். பை சிறப்பாகவே வந்திருந்தது. பிறகு பல வண்ணங்களில் பைகளைத் தைத்து, அவற்றை புகைப்படம் எடுத்து என்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் வைத்தேன்.



அதைப் பார்த்த எனது தோழி, ‘எனது மகனின் திருமணத்துக்கு, நீதான் தாம்பூலப்பை தைத்துக் கொடுக்க வேண்டும்’ என்றார். ஆயிரத்து ஐநூறு பைகள் செய்வதற்கு முதல் ஆர்டர் கிடைத்தது. முதல் முறையே பெரிய அளவில் செய்வதற்கு தயங்கிய என்னிடம், ‘உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீயே செய்து கொடு’ என்றார் தோழி. என் மீது நான் வைக்காத நம்பிக்கையைத் தோழி வைத்திருந்தது எனக்கு ஆச்சரியத்தையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்கியது.

பல சிரமங்களுக்கு இடையில் நம்பிக்கையோடு இரவு, பகல் பார்க்காமல் தொடர்ந்து உறவினர் ஒருவரின் உதவியுடன் பைகள் தயார் செய்து ஒருநாள் முன்னதாகவே கொடுத்தேன். தோழிக்கும், திருமணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் அந்தப் பை மிகவும் பிடித்திருந்தது” என்கிறார் பிரவீணா.

“நேர்மை, தரம் இதில் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. அதனால் நல்ல பெயருடன் நிறைய ஆர்டர்கள் எடுக்க முடிகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பல பெண்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பதாகச் சொல்கிறார்கள். நான் முதலில் பாதித் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொள்வேன். பெண்கள் தொழிலில் ஈடுபடும்போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அவற்றைத் தாண்டி நமது கனவை நோக்கிப் பயணிக்க வேண்டும்” என்று கூறும் பிரவீணா மூன்று பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இருக்கிறார். 

தொழில் நிறுவனம் தொடங்கி அதில் முழுவதும் பெண்களை நியமித்து நிர்வகிக்க வேண்டும்.  அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எதிர்காலத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார். 

Next Story