தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை


தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2019 11:15 PM GMT (Updated: 13 March 2019 6:44 PM GMT)

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளில் காணப்படும் ஓலைச்சுவடிகள் பெரும்பாலானவை. கன்னடம், மலையாளம் மொழிகளில் ஓரிரு எண்ணிக்கையிலும், பர்மா மொழியில் ஒரு ஓலைச்சுவடியும் உள்ளது. 70 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் மட்டுமின்றி 200 ஆண்டுகளுக்கு முன்பு அயல்நாடுகளில் அச்சிடப்பெற்ற ஜெர்மன், இத்தாலி, டச்சு, ஆங்கில மொழியில் அமைந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் உள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன்பால்கு, தரங்கம்பாடியில் புதிய அச்சுக்கூடத்தை நிறுவினார். அங்கு 1810-ம் ஆண்டு ‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்னும் நூலை 3 பிரதிகள் மட்டும் அச்சிட்டார். முதல் பிரதி லண்டன் அருங்காட்சியகத்திலும், மற்றொரு பிரதி தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திலும் பாதுகாக்கப்பட்டு வந்தது. 3-வது பிரதி எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேர் சிறப்பு அனுமதி பெற்று சரசுவதி மகால் நூலகத்திற்கு வந்தனர். அவர்கள் கண்ணாடி பேழையில் இருந்த ‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்னும் நூலை எடுத்து பார்த்தனர்.

அப்போது அதன் பக்கங்களை புகைப்படமும் எடுத்து கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்ததால் ஊழியர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியது. அந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு இருந்த நூலையும் காணவில்லை. சுற்றுலா பயணிகள் 2 பேர் தான் அந்த நூலை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதேபோல 1968-ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவரத்தினங்கள் பொறிக்கப்பட்ட கிருஷ்ணர் படம் கொள்ளை போனது. சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன நூல், கிருஷ்ணர் படத்தையும் மீட்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த புகார் தொடர்பாக 2 முறை ரகசியமாக சரசுவதி மகால் நூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் சரசுவதி மகால் நூலுகத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தனர். அவர்கள் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடம் கொள்ளை போன நூல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ஊழியர்கள் அளித்த வாக்குமூலத்தை தட்டச்சு மூலம் உடனுக்குடன் போலீசார் பதிவு செய்தனர். இந்த விசாரணை மாலை 4.15 மணி வரை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரிடம் நிருபர்கள் கேட்டபோது, நூல் கொள்ளை போனது குறித்து புகார் வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எதை பற்றியும் சொல்ல முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Next Story