சானியா மிர்சாவிடம் தவறாக நடந்த கிரிக்கெட் வீரர், கணவர் சோயிப் மாலிக் புகார்


சானியா மிர்சாவிடம் தவறாக நடந்த  கிரிக்கெட் வீரர், கணவர் சோயிப் மாலிக் புகார்
x
தினத்தந்தி 3 Sep 2018 8:37 AM GMT (Updated: 3 Sep 2018 8:37 AM GMT)

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கிரிக்கெட் வீரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். சானியா கணவர் சோயிப் மாலிக் கொடுத்த புகார் அடிப்படியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #SaniaMirza


வங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக்குரிய வீரர் எனப் பெயரெடுத்தவர். 26 வயதான சபிர் ரஹ்மான் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சில வாரங்கள் சஸ்பெண்ட் செய்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

அதன்பின் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதால், சபீர் ரஹ்மான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், இதையடுத்து இவர் மீது 6 மாதங்கள் வரை தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது ஹோட்டலுக்கு அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி பெண் ஒருவரை அழைத்துவந்த புகாரில் சபிர் ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தமும் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டது.

தற்போது அவர் மீது சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றதாக அவரின் கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ளார்.  குற்றம் உண்மையானதாக இருந்தால், சபீர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன 

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் சானியா மிர்ஸா சிறப்பாகச் செயல்பட்டு பட்டங்களை வென்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.

கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து சானியா மிர்சா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறை தவறி வங்கதேச வீரர் ஒருவர் நடந்ததாகக் கூறி அவரின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை கிரிக்கெட் கமிட்டி ஆப் தாகா மெட்ரோபோலீஸ் (சிசிடிஎம்) அமைப்பின் தலைவரிடம் சோயிப் மாலிக் வழங்கியுள்ளார் என்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Next Story